கோட்சே பற்றிய சர்ச்சை கருத்து: மன்னிப்பு கோரிய பிரக்யாசிங்

வெள்ளிக்கிழமை, 17 மே 2019      இந்தியா
Pragya singh 2019 05 17

போபால், நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என போபால் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் கூறியதற்கு பாரதீய ஜனதா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர் மன்னிப்பு கோரினார்.

தலைவர்கள் கண்டனம்

அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எஸ்.மோகன்ராஜூக்கு ஆதரவாக அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 12-ம் தேதி பள்ளப்பட்டி என்ற இடத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவர்தான் நாதுராம் கோட்சே. அங்குதான் தீவிரவாதம் தொடங்குகிறது. காந்திஜியின் படுகொலைக்கு பதில் பெறத்தான் இங்கு வந்துள்ளேன் என கூறினார். அவர் இவ்வாறு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல்ஹாசனின் கருத்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், பாரதீய ஜனதா, அ.தி.மு.க. கட்சிகளும் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.

பிரக்யாசிங் கருத்து

இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் போபால் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடும் பிரக்யா சிங், ‘நாதுராம் கோட்சேவை தீவிரவாதி என கூறியவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி தரப்படும். கோட்சே ஒரு சிறந்த தேச பக்தர். அவர் தேச பக்தராக தான் இருந்தார். இருக்கிறார். இனியும் இருப்பார் என கூறினார். பிரக்யா சிங்கின் பேச்சுக்கு பாரதீய ஜனதா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னிப்பு கோரினார்

கோட்சே பற்றி பிரக்யா சிங் கூறிய கருத்தில் பா.ஜ.க.விற்கு உடன்பாடு இல்லை. பிரக்யா சிங் தனது கருத்துக்கு பொது வெளியில் மன்னிப்பு கோர வேண்டும். கோட்சே பற்றிய கருத்து தொடர்பாக பிரக்யாசிங்கிடம் பா.ஜ.க. சார்பில் விளக்கம் கேட்கப்படும் என்று பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் தெரிவித்தார். மேலும் பிரக்யா சிங் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், சிறிது நேரத்திலேயே அவர் மன்னிப்பு கேட்டார். மத்திய பிரதேச மாநில பாரதீய ஜனதா கட்சித்தலைவர் ராகேஷ் சிங் இதுகுறித்து கூறும் போது, “இது ஒரு பிரச்சினை அல்ல. ஆனாலும் அவர் மன்னிப்பு கேட்டு விட்டார். தனது கருத்தை திரும்பப் பெற்றுக் கொண்டார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து