திருப்பதியில் வரும் 14-ம் தேதி ஜேஷ்டாபிஷேகம் துவக்கம் - 3 நாட்களுக்கு ஆர்ஜித சேவை ரத்து

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூன் 2019      ஆன்மிகம்
tirupathi 2018 8 12

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 14-ம் தேதி ஜேஷ்டாபிஷேகம் தொடங்குகிறது. இதையொட்டி, 3 நாட்களுக்கு ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு ஜேஷ்டா மாதத்தில் ஜேஷ்டா நட்சத்திரம் முடிவதற்குள் ஜேஷ்டாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். பல ஆண்டுகள் பழமை வாய்ந்த மலையப்பசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார் உற்சவர் சிலைக்கு தினமும் அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. இதனால், சிலைகள் சேதமடையாமல் இருப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜேஷ்ட மாதத்தில் சுவாமிக்கு அணிவிக்கக் கூடிய தங்க கவசம் அகற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் அணிவிக்கப்பட்டு வருகிறது.

அது போல், இந்தாண்டுக்கான ஜேஷ்டாபிஷேகம் வருகிற 14-ம் தேதியில் இருந்து 16-ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. ஜேஷ்டாபிஷேகத்தின் முதல் நாளான 14-ம் தேதி உற்சவர் மலையப்ப சுவாமி மீது அணிவிக்கப்பட்டிருக்கும் தங்க கவசம் அகற்றப்பட்டு சிறப்பு யாகம், அபிஷேகம் ஆகியவை நடந்து முடிந்ததும் வைர கவசம் அணிவிக்கப்படுகிறது. வைர கவசத்துடன் உற்சவர் மலையப்பசுவாமி கோயிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். 2-வது நாளான 15-ம் தேதி முத்துக்கவசமும், 3-வது நாளான 16-ம் தேதி மலையப்ப சுவாமிக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, நான்கு மாடவீதிகளில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

ஜேஷ்டாபிஷேகத்தின் நிறைவு நாளில் மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்க கவசம் ஆண்டு முழுவதும் அப்படியே வைக்கப்படும். அடுத்த ஆண்டு ஜேஷ்டாபிஷேகத்தின் போது மீண்டும் உற்சவர் மீது அணிவிக்கப்பட்ட கவசம் அகற்றப்படும். ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி 14-ம் தேதி நிஜபாத தரிசனம், 15-ம் தேதி வசந்த உற்சவம், 16-ம் தேதி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், வசந்த உற்சவம் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. இந்த 3 நாட்களிலும் அதிகாலை 3.30 மணியில் இருந்து 4.30 மணிவரை நடக்கும் தோமாலை சேவை, அதிகாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணிவரை நடக்கும் அர்ச்சனை சேவை ஆகியவை பக்தர்களின்றி ஏகாந்தமாக நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து