முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்திய அணியின் வெற்றி தொடருமா? நியூசிலாந்துடன் இன்று பலப்பரீட்சை

புதன்கிழமை, 12 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

நாட்டிங்காம் : உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியுடன் இன்று மோதும் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெறும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர்.

ரவுண்டு ராபின்....

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் 10 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ரவுண்டு ராபின் முறையில் ஒரு ஆட்டத்தில் விளையாட வேண்டும். அதன்படி ஒவ்வொரு அணிக்கும் 9 ஆட்டம் இருக்கும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

தொடர் வெற்றி...

விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 36 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. இந்திய அணி 3-வது ஆட்டத்தில் நியூசிலாந்தை இன்று (13-ம் தேதி) எதிர்கொள்கிறது. நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு இந்தப் போட்டி நடக்கிறது.

சவாலான ஒன்று...

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் திகழும் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். நியூசிலாந்து அணி இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை. தான் மோதிய 3 ஆட்டத்திலும் வென்று இருந்தது. இதனால் அந்த அணியை வீழ்த்துவது சவாலாக விளங்கும்.

ஆனால் அதே நேரத்தில் நியூசிலாந்து பெரிய அணிகளுக்கு எதிராக இந்த வெற்றியை பெறவில்லை. இதனால் நம்பிக்கையுடன் இந்திய அணி விளையாடும்.

அணிக்கு பின்னடைவு...

தொடக்க வீரர் தவான் காயம் அடைந்தது இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதிப்பாகும். பெருவிரலில் ஏற்பட்ட எலும்பு முறிவால் அவர் 2 போட்டிகளில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் நாடு திரும்ப மாட்டார் என்பதால் மாற்று வீரர் அனுப்பப்படமாட்டார். தவான் இன்றைய போட்டியில் ஆட மாட்டார் என்பதால் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக லோகேஷ் ராகுல் விளையாடுகிறார். அவர் தற்போது 4-வது வரிசையில் விளையாடி வருகிறார்.

தினேஷ் கார்த்திக்...

இதனால் 4-வது வரிசையில் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் சங்கர் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும். தினேஷ் கார்த்திக் அனுபவம் வாய்ந்தவர். விஜய் சங்கர் ஆல்ரவுண்டர் வரிசையில் ஜொலிக்க கூடியவர். இருவரும் உலக கோப்பையில் இதுவரை விளையாடவில்லை. அதே நேரத்தில் ரவீந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆல்ரவுண்டரில் முத்திரை பதிக்கக்கூடியவர். மேலும் அனுபவம் வாய்ந்தவர். இதனால் ஜடேஜா முன்னுரிமையில் இருக்கிறார். ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து வீரர்கள் தேர்வு இருக்கும்.

வலுவான பேட்டிங்...

இந்திய அணியின் பேட்டிங் வலுவாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இதை காண முடிந்தது. ரோகித் சர்மா, கேப்டன் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, டோனி, ராகுல் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

இதேபோல பந்து வீச்சும் நேர்த்தியுடன் இருக்கிறது. வேகப்பந்தில் பும்ரா, புவனேஷ்வர்குமார் ஆகியோரும் சுழற்பந்தில் யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரும் திறமையாக வீசி வருகிறார்கள்.

குல்தீப் யாதவ்...

பந்து வீச்சாளர்கள் நல்ல நிலையில் இருப்பதால் அணியில் மாற்றம் செய்யப்படமாட்டாது. இதனால் முகமது சமிக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம். ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் கூடுதல் சாதகமாக இருந்தால் குல்தீப் யாதவ் இடத்தில் அவர் தேர்வாகலாம்.

நியூசி. ஆர்வம்...

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் வங்காள தேசத்தை 2 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.

ஹென்றி, ஜேம்ஸ்...

நியூசிலாந்து அணியின் பேட்டிங்கில் கேப்டன் வில்லியம்சன், காலின் முன்ரோ குப்பில் ஆகியோரும், பாபவசல் டிரான்ட் போல்ட், ஹென்றி, ஜேம்ஸ் நிசம் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். நியூசிலாந்து மிகப்பெரிய அணியுடன் தற்போது மோதுவதால் மிகவும் கவனத்துடன் விளையாடும். அதேநேரத்தில் இங்கிலாந்து போன்ற ஆடுகளங்களில் அந்த அணி வீரர்கள் திறமையாக ஆடக் கூடியவர்கள்.

மழை அச்சுறுத்தல்...

இன்றைய ஆட்டத்திலும் மழை அச்சுறுத்தல் இருக்கிறது. பிற்பகல் மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் கடைசியாக இந்த ஆண்டு ஜனவரி- பிப்ரவரி மாதம் நியூசிலாந்தில் ஒரு நாள் தொடரில் மோதின. இதில் இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை வென்று இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து