முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியை நெருங்குகிறது

செவ்வாய்க்கிழமை, 30 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

மேட்டூர் : கடந்த வாரம் 39.13 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 50 அடியை நெருங்கியுள்ளது.  

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. தற்போது தென்மேற்கு மழையின் தீவிரம் சற்று குறைந்தால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு கடந்த வாரம் 5 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்த நிலையில் தற்போது நீர்வரத்து 3 ஆயிரத்து 490 கன அடியாக குறைந்துள்ளது.

அணையில் இருந்து 7 ஆயிரத்து 927 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. 124.8 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 87.13 அடியாக உள்ளது.

இதே போல கடந்த வாரம் கபினி அணைக்கு 7 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்த நிலையில் தற்போது நீர்வரத்து 3 ஆயிரத்து 490 கன அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 84 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் தற்போது 73 அடியாக உள்ளது.

இதனால் 2 அணைகளில் இருந்தும் திறந்து விடப்பட்ட 12 ஆயிரத்து 927 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு காவிரியில் வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கலில் நேற்று முன்தினம் 9 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து 9 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்தது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்துள்ளது.

அவர்கள் உடலில் எண்ணை தேய்த்து அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி 8-வது நாளாக நேற்றும் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகிறார்கள்.

ஒகேனக்கலில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 8 ஆயிரத்து 400 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று  மேலும் அதிகரித்து 8 ஆயிரத்து 900 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் ஒரு நாளைக்கு ஒரு அடிக்கு மேல் உயர்ந்து வருகிறது. கடந்த 23-ந் தேதி 39.13 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து நேற்று  46.49 அடியாக இருந்தது. இதனால் கடந்த 7 நாட்களில் மட்டும் நீர்மட்டம் 7 அடிக்கும் மேல் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இனி வரும் நாட்களில் இதே அளவுக்கு தண்ணீர் வந்தாலும் 3 நாட்களில் அணை நீர்மட்டம் 50 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து