தலைமை செயலகத்தில் நடந்த பேச்சில் உடன்பாடு: தனியார் தண்ணீர் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் -கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அரசு உறுதி அளித்ததாக சங்கத்தலைவர் பேட்டி

புதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2019      தமிழகம்
water lorry strike withdraw 2019 08 21

சென்னை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தனியார் தண்ணீர் லாரிகளின் ஸ்டிரைக் நேற்று தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அதன் சங்க தலைவர் நிஜலிங்கம் தெரிவித்தார்.  இது தொடர்பாக நேற்று தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இது தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

நிலத்தடி நீர் எடுப்பதற்கு ஐகோர்ட் வழிகாட்டுதலின் படி தமிழக அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. கனிம வளத்தில் தண்ணீர் சேர்க்கப்பட்டதால் தனியாருக்கு உரிமை தர முடியாது என்று அரசு அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதன் அடிப்படையில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கும் லாரி உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

எனவே தண்ணீர் எடுக்க முறையாக அனுமதி வழங்கக் கோரி தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தண்ணீர் லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தால் வணிக வளாகங்கள், ஓட்டல்கள், விடுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நேற்று தனியார் டேங்கர் லாரிகள் தண்ணீர் வழங்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட லாரி உரிமையாளர்கள் லாரிகளை மாதவரம், மஞ்சம்பாக்கத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். இதே போல் பூந்தமல்லி, வேலப்பன்சாவடி உள்ளிட்ட பல இடங்களில் நூற்றுக்கணக்கான தண்ணீர் லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் நேற்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டதாக தனியார் தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நிஜலிங்கம் தெரிவித்தார். கோரிக்கைகளை அரசு பரிசீலிப்பதாக உறுதி அளித்ததால் போராட்டத்தை விலக்கி கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார். இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து