பெரு : மத்திய அமெரிக்க நாடான பெருவில் நரபலி கொடுக்கப்பட்ட15 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளின் எலும்புக் கூடுகள் குவியலாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெருவின் தலைநகர் லிமாவிலிருந்து வடக்கில் உள்ள ஹுவான்சாகோவில் சுமார் 227 சிறார்களின் எலும்புக் கூடுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் குழந்தைகளெல்லாம் நரபலிக்காக கொல்லப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பெரன் காஸ்டில்லோ கூறும் போது, நரபலி கொடுக்கப்பட்டு குழந்தைகள் கொல்லப்பட்டதில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் இதுவே பெரிய இடம். இங்கு நீங்கள் எங்கு தோண்டினாலும் குழந்தைகளின் எலும்புக் கூடுகள் உள்ளன. மிக அருகருகே அவர்கள் குழந்தைகளைக் கொன்று புதைத்திருக்கிறார்கள். பெரும்பாலான குழந்தைகளின் சடலம் கடலைப் பார்த்தவாறு உள்ளது. இன்னும் சில சடலங்களில் எலும்பும் தோலும் அப்படியே உள்ளது. இந்தக் குழந்தைகள் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தார். பெருவில் இதற்கு முன்னரும் 2018-ம் ஆண்டு இதே பகுதியில் நரபலி கொடுக்கப்பட்ட எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.