முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடியின் தவறான நிர்வாகத்தால் பொருளாதார வளர்ச்சி சீர்குலைந்துவிட்டது : சித்தராமையா

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு :  மோடியின் தவறான ஆட்சி நிர்வாகத்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சீர்குலைந்துவிட்டது என்று சித்தராமையா குற்றம்சாட்டினார்.   

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் அமைப்பின் செயற்குழு கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ், செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா உள்பட முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர். இதன் பிறகு சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் ஆட்சி அதிகாரத்தில் இருந்திருந்தால் தேர்தலில் மின்னணு வாக்கு எந்திரங்கள் பயன்படுத்துவதை ரத்து செய்திருப்பேன். இந்த எந்திரங்கள் பற்றி நிறைய சந்தேகங்கள் உள்ளன. அதனால் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும். மோடியின் தவறான ஆட்சி நிர்வாகத்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சீர்குலைந்துவிட்டது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்துவிட்டது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துவிட்டது. வெறும் பேச்சுகளால் ஆட்சி நடத்தி வரும் மோடி, பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை. வருகிற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையையே பயன்படுத்த வேண்டும். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒப்புக்கொண்டால், இதற்கு தலைமை ஏற்க காங்கிரஸ் தயாராக உள்ளது.  

முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு எதிராக பா.ஜனதா தலைவர்கள் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் நிலையில், அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியை ஒழிக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது. காங்கிரஸ் கட்சியை யாராலும் அழிக்க முடியாது.

மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, பொருளாதார வளர்ச்சியை சரியான பாதையில் கொண்டு சென்றார். மோடியின் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்ய மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இவ்வாறு சித்தராமையா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து