ரஷிய பார்முலா1 கார் பந்தயம் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம்

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2019      விளையாட்டு
Hamilton 2019 09 30

சோச்சி : ரஷியாவில் நடந்த பார்முலா1 கார் பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடத்தை பிடித்தார்.

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 16-வது சுற்றான ரஷிய கிராண்ட்பிரி பந்தயம் சோச்சி ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரமான 309.745 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் அதிவேகத்தில் சென்றனர்.

முடிவில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 33 நிமிடம் 38.992 வினாடிகளில் முதலாவது வந்து அதற்குரிய 26 புள்ளிகளை தட்டிச் சென்றார். இந்த சீசனில் ஹாமில்டன் சுவைத்த 9-வது வெற்றி இதுவாகும். இவரை விட 3.829 வினாடி மட்டுமே பின்தங்கிய பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ் அணி) 2-வது இடத்தை பிடித்து 18 புள்ளிகளை பெற்றார். தகுதி சுற்றில் முதலிடத்தை பிடித்த மொனாக்கோ வீரர் சார்லஸ் லெக்லெர்க் (பெராரி அணி) 3-வதாக வந்தார். அவருக்கு 15 புள்ளிகள் கிடைத்தது. 5 வீரர்கள் இலக்கை நிறைவு செய்யாமல் விபத்து மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெளியேறினர். இதில் 4 முறை சாம்பியனான செபாஸ்டியன் வெட்டலும் (ஜெர்மனி) அடங்குவார்.

இதுவரை நடந்துள்ள 16 சுற்று முடிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் ஹாமில்டன் (322 புள்ளி) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். போட்டாஸ் 249 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், சார்லஸ் லெக்லெர்க் 215 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். 17-வது சுற்று போட்டி வருகிற 13-ம் தேதி ஜப்பானில் நடக்கிறது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து