புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேறுமா? பிரிட்டன் பாராளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடக்கிறது

வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2019      உலகம்
new Pirekcit UK  parliament 2019 10 18

புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக பிரிட்டன் எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ள நிலையில், பாராளுமன்றத்தில் இன்று  வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. 

பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இதற்கு அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூனுக்கு உடன்பாடு இல்லாதபோதும், அரசியல் அழுத்தங்கள் காரணமாக 2016-ல் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 51.8 சதவிகிதம் பிரிட்டன் மக்கள் வெளியேறலாம் என்றும், 48.2 சதவிகிதம் மக்கள் வெளியேற வேண்டாம் என்றும் வாக்களித்தனர்.

வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தால் பதவி விலகுவதாக கேமரூன் அறிவித்திருந்தார். அதன்படி, அவர் பதவியும் விலகினார். தெரசாமே பிரதமராக பதவியேற்றார். அதன்பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் சுமுகமாக விலகுவது தொடர்பாக பிரெக்சிட் ஒப்பந்தம் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை பிரதமர் தெரசா மே தொடங்கினார். ஆனால் அவரது ஒப்பந்தம், பாராளுமன்றத்தில் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டது. இவ்வாறு இழுபறி நீடித்ததால் தெரசா மே பதவி விலகினார். போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார்.

இதற்கிடையே பிரெக்சிட்டை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டித்தது ஐரோப்பிய ஒன்றியம். அதற்குள் பிரிட்டன் பிரெக்சிட் செயல்திட்டங்களை முடித்து வெளியேறியாக வேண்டும். இதனால் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கடும் நெருக்கடியான சூழ்நிலை உருவானது. எனவே, ஒப்பந்தம் செய்தோ, ஒப்பந்தம் இல்லாமலோ நிச்சயம் அக்டோபர் 31-ம் தேதிக்குள் பிரிட்டன் வெளியேறும் என போரிஸ் ஜான்சன் உறுதி அளித்து, அதற்கான பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டார். அவரது முயற்சியில் அடுத்தடுத்து சறுக்கல் ஏற்பட்டது. 

இந்த நிலையில்தான் புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும், ஐரோப்பிய ஒன்றிய ஆணைய தலைவர் ஜீன் கிளாட் ஜங்கரும் அறிவித்துள்ளனர்.

இந்த புதிய ஒப்பந்தமானது, பிரிட்டன் வசம் முழு கட்டுப்பாடும் இருக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். சட்டம், எல்லைகள், வர்த்தகம் போன்றவற்றுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பிரிட்டன் வசம் முழுக் கட்டுப்பாடு இருப்பதை உறுதி செய்வதாகவும், சுதந்திரமான வர்த்தகம் மற்றும் நட்பின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு புதிய உறவை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இரு நாடுகளின் பாராளுமன்றமும் ஒப்புதல் அளித்த பிறகுதான் பிரெக்சிட் ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும். இந்த ஒப்பந்தம் மீது வாக்கெடுப்பு நடத்துவதற்காக பிரிட்டன் பாராளுமன்றம் இன்று கூடுகிறது. 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து