முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் டிரம்ப் நிர்வாகம் கிடுக்கிப்பிடி: இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு ஹெச்-1பி விசா மறுப்பது அதிகரிப்பு

புதன்கிழமை, 6 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : இந்தியாவில் இருக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஹெச்-1பி விசாவை வழங்காமல், விண்ணப்ப அளவிலேயே நிராகரிக்கும் அளவு அதிகம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவை ஆகியவற்றிடம் இருந்து பெற்ற புள்ளி விவரங்கள் அடிப்படையில் அமெரிக்க கொள்கைகளுக்கான தேசிய அமைப்பு நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. ஹெச்-1பி விசா பெறுவதற்காக இந்திய ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றுவோர் விண்ணப்பித்தால் அதை விண்ணப்ப அளவிலேயே நிராகரிப்பது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு இந்த நிராகரிப்பு வெறும் 6 சதவீதம் இருந்த நிலையில் தற்போது 24 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவைச் சேராத வெளிநாட்டவர்களை அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் வேலைக்கு பணியமர்த்திக் கொள்வதற்காக வழங்கப்படுவது ஹெச்-1பி விசா. இந்த விசாவை உலக நாடுகளில் அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர். ஆனால், அமெரிக்க வேலை அமெரிக்க மக்களுக்கே என்று அதிபர் டிரம்ப் வெளிப்படையாகப் பிரகடனப்படுத்தி பல்வேறு கட்டுப்பாடுகளையும், பல்வேறு புதிய விதிமுறைகளையும் விசா வழங்குவதில் கொண்டு வந்துள்ளது. இதனால், இப்போது ஹெச்-1பி விசா பெறுவது கடினமாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, அமெரிக்காவில் உள்ள அமேசான், மைக்ரோசாப்ட், இன்டெல், கூகுள் ஆகிய நிறுவனங்களில் பணியாற்ற இந்தியர்கள் ஹெச்-1பி விசாவை கடந்த 2015-ம் ஆண்டு விண்ணப்பித்த போது எளிதாகக் கிடைத்தது. ஒரு சதவீதம் மட்டுமே விண்ணப்ப அளவில் நிராகரிக்கப்பட்டது. ஆனால், 2019-ம் ஆண்டில் அமேசான் நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு 6 சதவீதம், மைக்ரோசாப்ட் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கு 8 சதவீதம், இன்டல் 7 சதவீதம், கூகுள் 3 சதவீதம் பேருக்கும் விசா மறுக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கு 2 சதவீதம் விசா மறுக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக டெக் மகிந்திரா நிறுவனத்துக்குக் கடந்த 2015-ம் ஆண்டில் ஹெச்-1பி விசா விண்ணப்ப அளவிலேயே மறுப்பது 4 சதவீதம் இருந்த நிலையில், 2019-ம் ஆண்டில் 41 சதவீதமாக அதிகரித்துள்ளது. டி.சி.எஸ் நிறுவனத்தில் பணியாற்றுவோருக்கு 2015-ம் ஆண்டில் 6 சதவீதம் விசா மறுக்கப்பட்ட நிலையில் தற்போது 34 சதவீதம் மறுக்கப்பட்டுள்ளது. அதே போல விப்ரோ நிறுவனத்துக்கு விசா மறுப்பு அளவு 7 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமும், இன்போசிஸ் நிறுவனத்துக்கு 2 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று பணியாற்றும் இந்தியர்களுக்குத்தான் விசா விண்ணப்ப அளவில் மறுப்பது அதிகரித்துள்ளது. ஆனால், அமெரிக்காவில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் சார்பில் ஊழியர்கள் விண்ணப்பித்தால் அவர்களுக்கு விசா மறுப்பு குறைந்த அளவிலேயே இருந்து வருகிறது. அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் வந்தது முதல் விசா வழங்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகள், புதிய விதிமுறைகள் புத்தியது போன்றவற்றால் விசா வழங்குவதில் கட்டுப்பாடு தொடர்ந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து