மகரவிளக்கு வழிபாடு 17-ந்தேதி தொடங்குகிறது சபரிமலையில் 10 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு வழிபாடு 17-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு போடப்படுகிறது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன்கோவில் புகழ் பெற்றது. இங்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து, வழிபடுகிறார்கள். இந்த கோவிலில் ஆண்டு தோறும் மகர விளக்கு வழிபாடு 2 மாதங்கள் நடைபெறும்.
அந்த வகையில் இந்த ஆண்டு, மகர விளக்கு வழிபாடு வரும் 17-ந்தேதி தொடங்குகிறது.இதையொட்டி 5 கட்டங்களாக சபரிமலை ஐயப்பன் கோவிலிலும், அதன் சுற்றுபுறங்களிலும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இதுபற்றி கேரள மாநில போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெஹரா, திருவனந்தபுரத்தில் கூறுகையில், “இந்த ஆண்டு சபரிமலை சீசனில் பாதுகாப்பு கடுமையானதாக இருக்கும்” என குறிப்பிட்டார்.