முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்கி லீக்ஸ்’ நிறுவனர் அசாஞ்சேவுக்கு தீவிர சிகிச்சை தேவை: டாக்டர்கள் அரசுக்கு கடிதம்

செவ்வாய்க்கிழமை, 26 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

லண்டன் : லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ‘விக்கி லீக்ஸ்’ நிறுவனர் அசாஞ்சேவுக்கு தீவிர சிகிச்சை தேவை என்று 60-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் இணைந்து இங்கிலாந்து உள்துறை செயலாளர் பிரீத்தி பட்டேலுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.  

அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டு உலகமெங்கும் பிரபலமானவர், ‘விக்கி லீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே. இந்த விவகாரத்தில் ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்ய அமெரிக்கா தீவிரம் காட்டியது. இதற்கிடையே சுவீடன் நாட்டில் இவருக்கு எதிராக 2 பெண்கள் பாலியல் புகார்களை கூறினார்கள். 

இதனால் நாடு கடத்தும் சூழ்நிலை உருவானதால் கடந்த 2012-ம் ஆண்டு அவர், லண்டனில் உள்ள ஈக்குவடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார். 7 ஆண்டுகளுக்கு பிறகு அசாஞ்சேவுக்கான அடைக்கலத்தை ஈக்குவடார் அரசு திடீரென வாபஸ் பெற்றதால் கடந்த ஏப்ரல் மாதம் அவர் லண்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஜாமீன் நிபந்தனையை மீறிய குற்றச்சாட்டில் 50 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, லண்டனின் புறநகரில் உள்ள பெல்மர்ஷ் சிறையில் அசாஞ்சே அடைக்கப்பட்டு உள்ளார். அங்கு அவர் தனிமை சிறையில் வைக்கப்பட்டு உள்ளதால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளது.

இந்த நிலையில் அசாஞ்சேவின் உடல் நிலை தொடர்பாக 60-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் இணைந்து இங்கிலாந்து உள்துறை செயலாளர் பிரீத்தி பட்டேலுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “அசாஞ்சே, மனச்சோர்வு உள்ளிட்ட உளவியல் பிரச்சினைகளாலும், பல் மற்றும் தோள்பட்டை தொடர்பான நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடனடியாக ஒரு பல்கலைக்கழக மருத்துவமனையில் முழுமையான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து