கே எஸ் அழகிரி முன்னிலையில் காங்கிரஸ் தொண்டர்கள் தள்ளுமுள்ளு -- கைகலப்பு திண்டுக்கல்லில் பரபரப்பு

செவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2019      திண்டுக்கல்
10 congress meet

திண்டுக்கல் -திண்டுக்கல்லில் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் மாநில தலைவர் கே. எஸ். அழகிரி முன்னிலையில் நிர்வாகிகளும் தொண்டர்களும் அடிதடியில் ஈடுபட்டதால்  பரபரப்பு ஏற்பட்டது.
 கடற்கரையில் மணலை கூட எண்ணி  விடலாம் ஆனால் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிகளின் எண்ணிக்கையை எண்ணிவிட முடியாது. காங்கிரஸ் என்றால் கோஷ்டி பூசல் அதிகம் உள்ள கட்சி என்பது தமிழக மக்கள் நன்கு அறிந்ததே.மேலும் தமிழக காங்கிரஸ் கட்சி கூட்டம் என்றால் அடிதடி ரகளைக்கு பஞ்சம் இருக்காது. அது போன்ற சம்பவம் திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது.
 திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக்கூட்டம் நாயுடு மஹாலில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிழக்கு மாவட்டம், மேற்கு மாவட்டம், மாநகர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த தலைவர்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியை சேர்ந்த மாநில தலைவர் கே. எஸ். அழகிரி பங்கேற்றார்.கூட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல் கனி ராஜா பேசுகையில் சித்தரேவு பேரூராட்சியின் முன்னாள் தலைவர் பால சுப்பிரமணி பெயரை சொல்லவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் மேடையில் பேசிக் கொண்டிருந்த அப்துல் கனியிடம் நேரில் சென்று ஏன் எனது பெயரை கூறவில்லை? என ஆவேசத்துடன் கேட்டார். அப்பொழுது அழகிரி முன்னிலையில் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை பார்த்துக் கொண்டிருந்த இருவரது ஆதரவாளர்களும் கடுமையான வார்த்தைகளைப் பேசி ரகளையில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில் இரு கோஷ்டியினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. சேர்கள் வீசப்பட்டன.  மாநில தலைவர் அழகிரியால் ஒன்றும் செய்ய முடியாமல் அமைதி காத்தார்.கிட்டத்தட்ட அப்பகுதியே போர்க்களமானது. பின்னர் இரு தரப்பினரையும் அழகிரி சமாதானப்படுத்தினார். பின்னர் அவர் பேசுகையில், கூட்டத்தில் தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தியவர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட பதவிகளில் இருந்தாலும் சரி, வார்டு செயலாளர்கள் பதவியில் இருந்தாலும் சரி அவர்கள் மீது மேலிடத்தில் புகார் கூறி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 உள்ளாட்சி தேர்தலில் தப்பித்தவறி இவர்கள் வெற்றிபெற்றால் பொதுமக்களின் குறைகளை இவர்களா தீர்க்க போகிறார்கள்? இவர்களது பிரச்சனையே பெரும் பிரச்சனையாக உள்ளது. என பார்வையாளர்கள் நமட்டு சிரிப்புடன் பேசி சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து