முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பவானிசாகர் அணை நிரம்பியது: உபரி நீர் திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை

புதன்கிழமை, 1 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

ஈரோடு : பவானி ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு அடுத்த படியாக பெரிய அணையாக உள்ள பவானிசாகர் அணை 2019-ம் ஆண்ட தென் மேற்கு பருவ மழையால் 3 முறை தனது முழு கொள்ளளவான 105 அடியை எட்டியது.அணை முழு கொள்ளளவை எட்டியதால் காளிங்கராயன் வாய்க்கால், தடப்பள்ளி, அரக்கன் கோட்டை, கீழ்பவானி பிரதான வாய்க்கால்களில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

விவசாயம் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. அடுத்த கட்டமாக விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அணைக்கு தொடர்ந்து கணிசமான அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் அணையின் நீர் மட்டம் நேற்று முன்தினம் மதியம் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருந்தது.நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 105 அடியை 4-வது முறையாக எட்டியது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அணைக்கு வந்த உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு வந்து விழுந்து பவானி ஆற்றில் பாய்ந்து ஓடுகிறது.

பவானி ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் குளிப்பவர்கள், துணி துவைப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணைக்கு நேற்று காலை 8 மணி முதல் வினாடிக்கு 1998 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பவானி ஆற்றுக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து