கட்டணமின்றி ஏழைகள் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற சென்னை பன்னோக்கு மருத்துவமனையில் ரூ. 29 கோடியில் கதிரியக்க கருவி சேவை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2020      தமிழகம்
CM Edappadi launch 2020 01 28

சென்னை : மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை சார்பில், சென்னை, தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 29 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை வளாகம் மற்றும் மருத்துவ நேரியல் முடுக்கி கருவியின் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

மேலும், சென்னை, அரசு இராயப்பேட்டை மருத்துவமனையில் 22 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை வளாகம் மற்றும் மருத்துவ நேரியல் முடுக்கி கருவியின் சேவையை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

அம்மாவின் வழியில் செயல்படும் தமிழக அரசு,   அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கு உயரிய சிகிச்சை அளிக்கும் வகையில், 190 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு  மருத்துவமனைகளில் Linear Accelerator  என்ற உயர் தொழில் நுட்ப மருத்துவக் கருவியை நிறுவி வருகிறது.  சென்னை, அடையாறு, புற்றுநோய் மையத்தில் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில அளவில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் ஒப்புயர்வு மையமாக தரம் உயர்த்தும் பணி தொடங்கப்பட்டு, தற்போது முடியும் தருவாயில் உள்ளது.  நான்கு புற்று நோய் மண்டலங்கள் 59 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை, அரசு இராஜாஜி மருத்துவமனை, கோயம்புத்தூர், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  இதுமட்டுமின்றி, காஞ்சிபுரம் மாவட்டம், காரப்பேட்டை, அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேண்மைமிகு மையம் ஏற்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.    புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை, மருத்துவ சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை ஆகிய மூன்று வகையான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.  புற்றுநோயை குணமாக்குவதில் கதிர் வீச்சு சிகிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சிகிச்சைக்கு நவீன கருவியான நேரியல் முடுக்கி கருவி மிகவும் அவசியம் ஆகும்.  அதனைக் கருத்தில் கொண்டு, அம்மா வழியில் செயல்படும் தமிழக அரசு, சென்னை, தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 29 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், சென்னை, அரசு இராயப்பேட்டை மருத்துவமனையில் 22 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கதிர் வீச்சு புற்றுநோயியல் துறை வளாகங்கள் மற்றும் மருத்துவ நேரியல் முடுக்கி கருவிகளை நிறுவியுள்ளது.  இப்புதிய வளாகத்தில், புற்றுநோய்க்கான புறநோயாளிகள் பிரிவு, கதிர்வீச்சு புற்றுநோய் கருவிகளான   நேரியல் முடுக்கி, சி.டி. சிமுலேட்டர், கதிர்வீச்சு கருவி, அறுவை சிகிச்சை அரங்கம் ஆகியவை ஒருங்கே அமைக்கப்பட்டுள்ளது.   இங்கு நிறுவப்பட்டுள்ள மருத்துவக் கருவிகள் உலகத்தரம் வாய்ந்த தொழில் நுட்பத்தில் முதன்மையான கருவியாகும். இம்மருத்துவக் கருவிகள், கதிர்வீச்சை உருவாக்கி, அதனை புற்றுநோய் தாக்கப்பட்ட உடல் திசுக்களின்மீது மட்டும் பாய்ச்சி, புற்றுநோய்  கிருமிகளை முழுவதுமாக அகற்றி, நோயை குணப்படுத்த பயன்படுகிறது.  பாதிக்கப்பட்ட உடல் திசுக்களைத் தவிர சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களுக்கு இக்கருவி எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.     புற்றுநோய்க்கு தனியார் மருத்துவமனைகளில் பல லட்சம் ரூபாய் செலவழித்து சிகிச்சை பெறவேண்டிய நிலையில், அரசு மருத்துவமனைகளில் ஏழை எளிய மக்கள், கட்டணம் ஏதுமின்றி புற்றுநோய்க்கான சிகிச்சையை இதன்மூலம் பெறலாம்.  முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமாகவும் மக்கள் இச்சிகிச்சையை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் க. சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை இணைச் செயலாளர்கள் சிவஞானம் மற்றும் டாக்டர் எஸ். நடராசன், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் டாக்டர் பி.உமாநாத், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஆர். நாராயணபாபு (பொறுப்பு) மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து