4 போட்டிகளில் முச்சதம், இரட்டை சதம், சதம் என அசத்திய சர்பராஸ் கான்

புதன்கிழமை, 12 பெப்ரவரி 2020      விளையாட்டு
Sarbaraz Khan 2020 02 12

டாக்கா : மும்பை அணிக்காக விளையாடி வரும் இளம் வீரரான சர்பராஸ் கான் நான்கு போட்டிகளில் முச்சதம், இரட்டை சதம், சதம் என விளாசி பிரமிக்க வைத்துள்ளார்.

மும்பையை சேர்ந்த இளம் வீரர் சர்பராஸ் கான். 2016-ம் ஆண்டு வங்காளதேசத்தில் நடைபெற்ற 50 உலக கோப்பை தொடரில் பங்கேற்றவர். இவர் மும்பை அணிக்காக முதல்தர கிரிக்கெட்டில் கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகம் ஆனார். அப்போது அவருக்கு 16 வயதே ஆகும். தொடக்க காலத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. தற்போது நடைபெற்று வரும் 2019-2020 ரஞ்சி டிராபி தொடக்கத்தில் மும்பை அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. நான்கு போட்டிகளுக்குப் பின் ஐந்தாவது போட்டியில் கர்நாடகாவிற்கு எதிராக களம் இறங்கினார். முதல் இன்னிங்சில் 8 ரன்களும், 2-வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 71 ரன்களும் அடித்தார். தமிழ்நாடு அணிக்கெதிராக 36 ரன்கள் சேர்த்தார்.

அதன்பின் உத்தர பிரதேசம் அணிக்கெதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த போட்டியில் முச்சதம் அடித்து 301 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்த போட்டியில் இமாச்சல பிரதேசம் அணிக்கெதிராக ஆட்டமிழக்காமல் 226 ரன்கள் விளாசினார். அதன்பின் நடைபெற்ற சவுராஷ்டிரா அணிக்கெதிராக முதல் இன்னிங்சில் 78 ரன்களும், 2-வது இன்னிங்சில் 25 ரன்களும் அடித்தார். இந்நிலையில் நேற்று தொடங்கிய மத்திய பிரதேசம் அணிக்கெதிராக முதல்நாள் ஆட்ட முடிவில் ஆட்டமிழக்காமல் 169 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் நான்கு போட்டிகளில் மூன்று மிகப்பெரிய இன்னிங்சை வெளிப்படுத்தியுள்ளார். நான்கு போட்டிகளில் இதுவரை 799 ரன்கள் குவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து