உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு தண்டனை- ஆந்திர அரசு

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2020      இந்தியா
Jaganmohan 2020 02 14

உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.  

ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகின்றது.

முதல்வராக  பொறுப்பேற்றதில் இருந்து ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு அரசு வேலை, வீடு தேடி வரும் ரேசன் பொருட்கள் திட்டம், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் தாய்மடி திட்டம் என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்.

பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு 21 நாட்களில் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் திஷாசட்டம், வீடு தேடி வரும் பென்சன் என தொடர்ச்சியாக அறிவித்த திட்டங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் ஆந்திராவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆந்திர மந்திரி சபை கூட்டம் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் அமராவதியில் நடைபெற்றது.  இந்தி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தகவல் தொடர்புதுறை மந்திரி நானி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆந்திராவில் வருகிற மார்ச் 15-ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் சில மாற்றங்களை செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

இதன்படி உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், மதுபானம் போன்றவற்றை வழங்கும் வேட்பாளர்கள் கையும், களவுமாக பிடிபட்டால் அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. தேர்தல் வெற்றிக்கு பிறகு இந்த முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் பதவி பறிக்கப்படும்.

இந்த குற்றங்களுக்கான ஜெயில் தண்டனை தற்போது 3 முதல் 6 மாதங்கள் வரை உள்ளது. இனி இந்த குற்றங்களுக்கான தண்டனை 3 ஆண்டுகளாக உயர்த்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து