முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவம், கிளர்ச்சியாளர்கள் மோதல்: சிரியாவில் ஒரே நாளில் 100 பேர் பலி

புதன்கிழமை, 26 பெப்ரவரி 2020      உலகம்
Image Unavailable

டமாஸ்கஸ் : சிரியாவில் ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மோதலில் ஒரே நாளில் 100 பேர் பலியாகி உள்ளனர்.

சிரியாவில் அதிபர் பஷர் அல் அசாத் தலைமையிலான அரசு படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 9 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.இந்த போரில் அதிபரின் அரசு படைக்கு ரஷிய ராணுவம் பக்கபலமாக இருந்து வருகிறது. அதே போல் கிளர்ச்சியாளர்களுக்கு அண்டை நாடான துருக்கி ராணுவம் ஆதரவு அளித்து வருகிறது. ரஷிய படைகளின் உதவியோடு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான நகரங்களை சிரியா ராணுவம் மீட்டு விட்டது. தற்போது நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள இத்லிப் மாகாணம் மட்டுமே கிளர்ச்சியாளர்களின் கோட்டையாக இருந்து வருகிறது. இந்த மாகாணத்தின் சரி பாதிக்கும் அதிகமான பகுதிகள் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ளன.மேலும் அண்டை மாகாணமான அலெப்போவின் மேற்கு பகுதிகள் சிலவற்றையும் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள அனைத்து பகுதிகளையும் மீட்க சிரியா ராணுவம் போராடி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சிரியா ராணுவம் ரஷிய படைகளின் உதவியோடு இத்லிப் மாகாணத்தில் தாக்குதல் நடத்த தொடங்கியது. இந்த போரில் அரசு படை தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களை அரசு படைகள் அடுத்தடுத்து மீட்டு வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை அல் நக்யார், அர நபியா மற்றும் அல்டையிர் ஆகிய முக்கியமான 3 நகரங்களை அரசு படைகள் மீட்டன.இந்த நிலையில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசு படைகள் இடையிலான மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இரு தரப்பும் கடுமையாக சண்டையிட்டு வருகின்றன.இத்லிப் மாகாணத்தின் தெற்கு பகுதியில் தங்களிடம் இருந்து மீட்கப்பட்ட நைராப் நகரை அரசு படையினரிடம் இருந்து மீண்டும் கைப்பற்ற கிளர்ச்சியாளர்கள் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர்.துப்பாக்கிகளால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் இருதரப்பும் பயங்கரமாக மோதிக்கொண்டன. கிட்டத்தட்ட 24 மணி நேரம் நீடித்த இந்த மோதலில் சுமார் 100 பேர் பலியாகினர்.இதில் 41 பேர் அரசு படை வீரர்கள், 53 பேர் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ஆவர். மேலும் இரு தரப்பிலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.எனினும் இந்த சண்டையின் இறுதியில் நைராப் நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். இது அரசு படைக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இதற்கிடையே அங்கு அரசு படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வரும் துருக்கி ராணுவத்துக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. இரு தரப்பும் பரஸ்பர வான்தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து