தன் சொந்த நாட்டு தொழிலாளர்களை பாதுகாக்க அமெரிக்காவில் கிரீன் கார்டு வழங்குவது நிறுத்தம் - டிரம்ப் அதிரடி நடவடிக்கை

வியாழக்கிழமை, 23 ஏப்ரல் 2020      உலகம்
Trump 2020 04 23

அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கு அனுமதி அளிக்கும் கிரீன் கார்டுகள் வழங்குவதை நிறுத்தி வைக்க அதிபர் டிரம்ப் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அமெரிக்க நாட்டில் நிரந்தரமாக குடியேறுவதற்கு பிற நாட்டினருக்கு வழங்கப்படுகிற அதிகாரப்பூர்வ அனுமதி அட்டை கிரீன் கார்டு என அழைக்கப்படுகிறது. இது ஐ.என்.ஏ. என்று அழைக்கப்படுகிற அமெரிக்க குடியேற்றம் மற்றும் தேசிய சட்டத்தின்கீழ் அந்த நாட்டில் குடியேறியவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த கிரீன் கார்டு கிடைத்து விட்டால் அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்க முடியும். இந்த கார்டு கிடைப்பதை கவுரவமாக அமெரிக்க வாழ் பிற நாட்டினர் கருதுகின்றனர்.

இப்போது அமெரிக்க நாட்டை கொரோனா வைரஸ் தொற்று நோய் உலுக்கி எடுத்து வருகிறது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் எடுத்து வருகிறார். 2 தினங்களுக்கு முன்பாகத்தான் அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதை தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்போவதாக டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார். 

இந்த நிலையில், அமெரிக்க தொழிலாளர்களை பாதுகாப்பதை கருத்தில் கொண்டு, கிரீன் கார்டுகள் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்ப்  நிருபர்களிடம் கூறியதாவது:-

நாம் முதலில் அமெரிக்க பணியாளர்களை கவனித்துக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. கிரீன் கார்டு வழங்க விதிக்கப்படுகிற தடையானது 60 நாட்களுக்கு அமலில் இருக்கும். அதற்கு பிறகு நீட்டிப்பு செய்ய வேண்டியது ஏற்பட்டாலோ, மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றாலோ, இதில் நானும், என்னோடு பணியாற்றுகிற பொருளாதார அடிப்படையிலான குழுவினரும் அப்போது மதிப்பீடு செய்வோம்.நிரந்தர குடியுரிமை தேடுவோருக்கு மட்டுமே இது பொருந்தும்.அதே நேரத்தில் இதில் சில விதி விலக்குகள் இருக்கும். அமெரிக்காவில் குடியேற்றத்துக்கு தற்காலிக தடை விதித்திருக்கிறோம். அமெரிக்காவில் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குகிறபோது, வேலையில்லாமல் இருக்கிற அமெரிக்கர்களுக்கு உதவி செய்வது தான் முக்கியம்.கொரோனா வைரசால் வேலை இழக்கிற அமெரிக்கர்கள் இடத்தில், வெளிநாட்டினரை கொண்டு வந்து அமர்த்துவது தவறு அநீதி. நாங்கள் அமெரிக்க தொழிலாளர்களை பாதுகாக்க விரும்புகிறோம். நாங்கள் முன்னேறும்போது, அவர்களை மென்மேலும் பாதுகாப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்காவில் நவம்பர் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த அறிவிப்பினை டிரம்ப் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து