முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில் புரிபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது : கிருஷ்ணகிரியில் முதல்வர் எடப்பாடி பேச்சு

புதன்கிழமை, 15 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

கிருஷ்ணகிரி : தொழில் புரிபவர்களுக்கு தேவையான உதவிகளை முழுமையாக செய்ய அரசு தயாராக உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசியதாவது, 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இது ஒரு சோதனையான நேரம். இன்று உலகையே உலுக்கிக் கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய நோய். இதைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு சில வழிமுறைகளை அறிவித்து, அதனை பின்பற்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதன் மூலமாக நோய்ப் பரவலை ஓரளவிற்கு நாம் தடுத்திருக்கின்றோம். 

இந்த இடைப்பட்ட காலத்தில் தொழிற்சாலைகள் இயங்குவது தடைபட்டிருக்கிறது. இந்த நோய்ப் பரவலைத் தடுக்கின்ற வழிமுறைகளை அரசு கண்டறிந்து அதற்குண்டான நடவடிக்கைகளை எடுத்த காரணத்தினாலே, ஊரடங்கு தளர்த்தப்பட்டு, சென்னையை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் 100 சதவிகித பணியாளர்களை வைத்து தொழிற்சாலைகள் இயங்கலாம் என்ற அறிவிப்பு கொடுத்து, தொழிற்சாலைகள் எல்லாம் தற்பொழுது இயங்கி வருகின்றன. இருந்தாலும், இன்னும் சில கட்டுப்பாடுகளை நாங்கள் வைத்திருக்கின்றோம்.

ஏனென்றால், இது ஒரு புதிய நோய், இது எவ்வாறு ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகின்றது என்பதை கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையில், உயிர் முக்கியமாக இருப்பதால், அதைக் காப்பாற்ற வேண்டிய கடமை அரசுக்கு முக்கியம். எனவேதான், இவ்வளவு கட்டுப்பாடுகளோடு அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அரசைப் பொறுத்தவரை தொழிற்சாலைகள் நன்றாக இயங்க வேண்டும், மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர வேண்டுமென்ற அடிப்படையிலே தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள் இயங்குவதற்கு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை தொழிலதிபர்கள் கவனமாகக் கையாள வேண்டும்.

இல்லையெனில், தொழிலாளர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு விடும். அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை அனைத்துத் தொழிற்சாலைகளும் பின்பற்ற வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால், இது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருப்பதினால், இது, நாம் ஒவ்வொருவரும் அக்கறையோடு செயல்பட வேண்டிய நேரம்.

அதனால் தொழிலதிபர்கள் தங்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிகின்ற தொழிலாளர்களுக்கு தக்க பாதுகாப்பு செய்து தர வேண்டும். அதுமட்டுமல்லாமல், மத்திய அரசாங்கம் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் இயங்குவதற்கு தேவையான கடனுதவிகளை அறிவித்திருக்கிறது. இதனை வங்கி மேலாளர்களும் தெரிவித்தார்கள்.

ஓசூர் தொழிற்பேட்டையில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு இதுவரை சுமார் 139 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக சொன்னார்கள். 20 விழுக்காடு கடனுதவி வழங்கப்படுமென்ற மத்திய அரசின் அறிவிப்பின்படி, வங்கி கடனுக்கு விண்ணப்பித்த குறு, சிறு, நடுத்தரத் தொழில்களில் பெரும்பாலானவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், தேவையான கடனுதவியை வழங்குவதற்கு வங்கிகள் தயாராக உள்ளன.

தமிழகத்தில் ஒசூர் மிகப்பெரிய தொழிற்பேட்டையாக விளங்கிக் கொண்டிருக்கிறது. தொழிற்சாலைகள் அதிகமாக வருகின்றபொழுதுதான் பொருளாதார மேம்பாடு அடைய முடியும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க முடியும். அந்நியச் செலவாணியை மீட்டுத் தருகின்ற ஒரு பகுதியாக இது விளங்கிக் கொண்டிருக்கிறது.

அரசு இதற்காக முன்னுரிமை வழங்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முனைப்பு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு புதிய தொழிற்சாலைகள் வருவதற்கு அரசாங்கமும் நிலம், மின்சாரம் போன்ற தேவையான உதவிகளை செய்து கொடுக்கிறது. புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கு உடனடியாக அனைத்து அனுமதிகளும் கிடைப்பதற்கு Single Window System ஏற்படுத்தி அதனை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

புதிய தொழிற்சாலைகள் தொடங்க முன்வந்து, அவர்களுக்கு ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால் அதனைக் களைவதற்கு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆகவே, தொழில் புரிபவர்களுக்கு தேவையான உதவிகளை முழுமையாக செய்ய அரசு தயாராக உள்ளது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து