முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்து களங்கம்: மர்ம நபர்களி்ன் கொடுஞ்செயலுக்கு முதல்வர் எடப்பாடி கடும் கண்டனம்: நடவடிக்கை எடுக்க நாராயணசாமிக்கு முதல்வர் வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 24 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : புதுவை மாநிலம் வில்லியனூரில் புதுச்சேரி - விழுப்புரம் புறவழிச்சாலையின் நடுவே எம்.ஜி.ஆர். சிலை உள்ளது. இந்த சிலையின் மீது காவி துண்டு அணிவிக்கப்பட்டதாக நேற்று முன்தினம் மதியம் தகவல் பரவியது. இதை அறிந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், அசனா, வையாபுரி மணிகண்டன் மற்றும் கட்சியினர் அங்கு திரண்டு வந்து பார்த்தனர். அப்போது சிலையின் கழுத்தில் காவி வேட்டியை துண்டு போல் அணிவிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர்கள் இதை கண்டித்து சிலையின் முன் நடுரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவி துண்டு அணிவித்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த வில்லியனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதையடுத்து எம்.ஜி.ஆர். சிலை மீது அணிவிக்கப்பட்டிருந்த காவி துண்டு அகற்றப்பட்டது. பின்னர் அ.தி.மு.க. வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். சிலைக்கு காவி துண்டு அணிவித்ததாக கூறிய பெண் சற்று மனநிலை பாதிக் கப்பட்டவர் போல் இருந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்து களங்கப்படுத்தியதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,  

வருடங்கள் கரைந்தாலும், வளர்பிறை சந்திரனாய் நிலைத்த புகழ் கொண்ட  நிகரில்லா வள்ளலாகவும்,  சாதி, மதங்கள் கடந்த சமத்துவத்தின் அடையாளமாகவும், இன்றளவும் ஏழை, எளியோரது இல்லத்திலும், உள்ளத்திலும் நிறையாசனமிட்டு வீற்றிருக்கும் தன்னிகரில்லா தலைவராகவும், ஒட்டுமொத்த உலகத் தமிழர்களால் போற்றி வணங்கப்படுகிற முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு மர்ம நபர்கள் காவித்துண்டு அணிவித்து, களங்கப்படுத்திய கொடுஞ்செயல் அண்டை மாநிலமான புதுச்சேரியில் நிகழ்ந்திருப்பது மிகுந்த மன வேதனையையும், வருத்தத்தையும் தருகிறது.  இந்த காட்டுமிராண்டித்தனம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.  

சமீபகாலத்தில் இதுபோன்ற, சமூகத்திற்கு தொண்டாற்றிய  தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது, களங்கப்படுத்துவது போன்ற இழிசெயல்கள் மிகுந்த வருத்தத்தை தருகிறது.  உயரிய கொள்கை என்பது நமது லட்சியங்களை பிறர் ஏற்க பாடுபடுவது மட்டுமல்ல, மாற்று கருத்துக்களையும், குறிப்பாக மக்களின் நம்பிக்கைகளையும் மதிப்பதும் ஆகும்.  கருத்து சுதந்திரமென்ற பெயரில் தரமற்ற விமர்சனங்களால்  பிறர் மனங்களை காயப்படுத்துவது, மனித நாகரீகத்திற்கு மாறான செயலாகும். 

மொழியால், இனத்தால், மதத்தால், சாதியால் வேறுபட்டு இருந்தாலும், இந்தியர் என்கிற ஒற்றைச் சொல்லில் பெருமிதம் கொண்டெழுகிற நமது ஒருமைப்பாட்டுக்கும், ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கவும்,  அதன்மூலம் ஓட்டு அரசியல் பிழைப்பிற்கும் சிலர் திட்டமிடுவதை ஒரு போதும் தமிழினம்  ஏற்காது.  ஆன்மீக செம்மல் அரவிந்தரும், உணர்ச்சிக் கவிஞர் பாவேந்தரும் உதித்த புதுச்சேரி மண்ணில், எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு அவமரியாதையை ஏற்படுத்தியிருக்கும் விஷமிகளை விரைந்து கண்டுபிடித்து, அவர்களை பின்னால் இருந்து இயக்கும் சமூக விரோதிகளையும் இனம் கண்டு, சமூகத்தின் முன்னும், சட்டத்தின் முன்னும் அவர்களை தோலுரித்து காட்டிட, கடுமையான விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள புதுச்சேரி முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு முதல்வர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், புதுச்சேரியில் எம்.ஜி.ஆர். சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை  நடத்தப்படும் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும்,  யார் தவறு செய்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து