முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா: தனிமைப்படுத்திக் கொண்டார் தமிழக கவர்னர் பன்வாரிலால்

புதன்கிழமை, 29 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கவர்னர் மாளிகையில் 38 ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 3 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் பூரண உடல் நலத்துடன் உள்ள நிலையில், மருத்துவர் ஆலோசனையின்படி 7 நாட்கள் அவர் தனிமைப்படுத்திக் கொண்டதாக கவர்னர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கிண்டி சர்தார் படேல் சாலையில் கவர்னர் வசிக்கும் ராஜ்பவன் மாளிகை உள்ளது. பல நூறு ஏக்கர் கொண்ட இந்த அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் நேரடியாகவும், வெளிப்புறத்திலும் பணியாற்றுகின்றனர்.

கவர்னர் மாளிகை ஊழியர்கள் 147 பேருக்குச் சமீபத்தில் கொரோனா தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டது.  அதில் 84 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் பொது சுகாதாரத்துறை மூலம் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இவர்கள் கவர்னர் அலுவலகத்துடன் நேரடித் தொடர்பில் இல்லாதவர்கள், கவர்னர் அல்லது உயர் அதிகாரிகளுடன் தொடர்பில் இல்லாதவர்கள் என ராஜ்பவன் விளக்கம் அளித்திருந்தது. 

இந்நிலையில் கவர்னர் மாளிகையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மருத்துவர் அளித்த ஆலோசனைப்படி 7 நாள் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக கவர்னர் மாளிகை நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

கவர்னர் மாளிகையில் 38 ஊழியர்களுக்கு கோவிட் -19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 35 பேருக்குத் தொற்று இல்லை எனத் தெரியவந்தது. 3 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

உடனடியாக அவர்கள் பொது சுகாதாரத்துறை மூலம் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். கவர்னர் மாளிகை மருத்துவர் நேற்று முன்தினம் கவர்னருக்கு  வழக்கமான மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்டார்.

இதில் கவர்னர் பூரண உடல் நலத்துடன் இருப்பது உறுதியானது. அவரை 7 நாள் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி மருத்துவர் கேட்டுக் கொண்டார். அதனடிப்படையில் கவர்னர், தன்னை 7 நாள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.  இவ்வாறு கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து