முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு

சனிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் கட்டுக்குள் வராததால், ஊரடங்கு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கணக்கில் கொண்டு சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட 6-ம் கட்ட ஊரடங்கு நேற்று முன்தினத்துடன் முடிவுக்கு வந்தது. அதன்படி, 7-வது கட்டமாக நேற்று 1-ம் தேதி முதல் 31-ம் தேதி ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஆகஸ்ட் மாதம் வரும் 5 ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. 

பொதுவாக ஞாயிற்றுக் கிழமைகளில் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால்தான் தளர்வு இல்லாத ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. எனினும் மக்கள் ஞாயிற்றுக்கிழமைக்கு தேவையான மீன், இறைச்சி போன்ற அசைவ பொருட்களை வாங்க கடை வீதிகளில் நேற்றே குவிந்திருந்தனர்.

சென்னை காசிமேடு மீன் சந்தையில் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் கூடினர். இதையடுத்து போலீசார் அவர்களை ஒழுங்குபடுத்தினர். 

முழு ஊரடங்கு தினமான இன்று, மருத்துவமனைகள், மருந்துக் கடைகள் மட்டுமே செயல்படும். காய்கறி கடை, மளிகை கடை உட்பட, அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும். வாகனங்கள் எதுவும் இயங்காது. மக்கள் வீடுகளில் இருந்து வெளியில் வராமல், முழு ஊரடங்கிற்கு, முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது 

கடந்த ஜூலை மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் (4 வாரமாக) தளர்வில்லா முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினார்கள்.  இதே போல ஆகஸ்ட் மாதத்திலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் (2, 9, 16, 23, 30 தேதிகள்) தளர்வு இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதன்படி இன்று தமிழகம் முழுவதும் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.  அதாவது நேற்று (1–ம் தேதி) நள்ளிரவு 12 மணி முதல் 3–ம் தேதி காலை 6 மணி வரையிலும் எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். 

7-ம் கட்ட ஊரடங்கு தொடங்கியதையடுத்து, சென்னையில் நேற்று முன்தினம் வரை 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்ட தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் நேற்று முதல் 75 சதவீத பணியாளர்களுடன் செயல்பட துவங்கின.  உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவு அருந்த அனுமதிக்கப்பட்டு இருந்தனர். 

காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள், காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து