முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஞாயிற்றுகிழமை ஊரடங்கு ரத்து எதிரொலி: வாகனங்களில் சகஜமாக வலம் வந்த பொதுமக்கள்

ஞாயிற்றுக்கிழமை, 6 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்தது. இறைச்சிக் கடைகளிலும் மக்கள் குவிந்தனர். சென்னை காசிமேடு, மதுரை கரிமேடு உள்ளிட்ட மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் சமூக இடைவெளியை மக்கள் கடைபிடித்ததாக தெரியவில்லை. 

கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக் கிழமைகளில், தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், தற்போது, அது ரத்து செய்யப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு ரத்துக்கு பிந்தைய, முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று இறைச்சிக் கடைகள், மீன் கடைகளில் மக்கள் குவிந்தனர். 5  மாதங்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமையில் இறைச்சி மற்றும் மீன் கடைகள் செயல்படுவதால் சென்னை மாநகரம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், சமூக இடைவெளி கடைப்பிடிக்க முடியாத சூழல் நிலவியது.  இதுபோல, காலையில் இருந்தே தேனீர் கடைகள், ஓட்டல்கள் திறக்கப்பட்டு பொதுப் போக்குவரத்தும் இயங்குவதால், சென்னையில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலை முதலே மீன்களை வாங்குவதற்காக மீன் வியாபாரிகள், பொதுமக்கள்  அதிகளவில் குவிந்தனர். எனினும்,  நோய் தொற்று பரவாமல் இருக்க, உரிய அனுமதி பெற்ற மீன் வியாபாரிகள் மட்டுமே காவலர்களின் சோதனைக்கு பின்பு உள்ளே அனுமதிக்கப்பட்டு மீன்கள் வாங்கி சென்றனர்.  ஒருசில வியாபாரிகளை தவிர, பெரும்பாலானோர் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியில்லாமல் கூட்டம் கூட்டமாக மீன்களை வாங்கி சென்றனர்.

இதனால் காசிமேடு கடற்கரை திருவிழா போல் களைகட்டியது.   ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவிலான வாகனங்கள் சென்று வந்தன. செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியை அதிகளவில் வாகனங்கள் கடந்து சென்றன. குறிப்பாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அதிகப்படியான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. போக்குவரத்தை சரி செய்யும் பணியில் சுங்கச்சாவடி போலீசார் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர். 

மதுரையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று இயல்பு நிலை திரும்பியது. மதுரை மாநகர் முழுவதும் போக்குவரத்துக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படாததால், சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமான அளவு காணப்பட்டது.  கோவை மாநகரமும்  இயல்பு நிலைக்கு திரும்பியது. பொதுமக்கள் முக கவசங்களுடன் வீடுகளில் இருந்து வெளியே வந்து கடைகளில் பொருட்களை வாங்கி சென்றனர். காலையில் இருந்தே கடைகள் மற்றும் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் நேற்று பொதுமக்கள் சகஜமான முறையில் சாலைகளில் வலம் வந்தனர். மாநகராட்சி பகுதிக்குள் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுவதை கண்காணிப்பதற்காக 4 மண்டலங்களிலும் உதவி ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், ஆடு, கோழி மற்றும் மீன் இறைச்சி வாங்க மக்கள் அதிக அளவில் குவிந்தனர். சென்ற வாரம் 150 முதல் 180 வரை விற்பனை செய்யப்பட்ட கோழிக்கறி, இன்றைய தினம் 220 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டதால் அசைவ பிரியர்கள் அதிருப்தி அடைந்தனர். எனினும், மக்கள் சமூக விலகலை கடைபிடித்து நின்று, விருப்பமான இறைச்சியை வாங்கிச் சென்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இறைச்சி கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதியது. கடைகளுக்கு வந்த பெரும்பாலான மக்கள் அரசு அறிவித்த பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்ற குற்றம்சாட்டும் எழுந்தது. சமூக தொற்று பரவல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து