முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் வெளியூர் பஸ்கள் - ரயில்கள் இயக்கம்

திங்கட்கிழமை, 7 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் ரெயில் சேவை நேற்று  தொடங்கியது. மாவட்டங்களுக்கு இடையே பஸ்போக்குவரத்தும் துவங்கியது. சென்னை மெட்ரோ ரயில் சேவையும் நேற்று துவங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அனைத்து போக்குவரத்து சேவைகளும் கடந்த மார்ச் மாதம் முதல் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு தற்போது பொதுப்போக்குவரத்து சேவை தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

இதனால் தமிழகத்தில் ரெயில்களை இயக்க வேண்டும் என தெற்கு ரெயில்வேக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்ததன் பேரில், 13 கொரோனா கால சிறப்பு ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி சென்னையில் இருந்து கோவை, மதுரை, திருச்சி, செங்கோட்டை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, காரைக்குடி உள்ளிட்ட வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்பட்டன.

இதற்கான ரெயில் டிக்கெட் முன்பதிவும் தொடங்கி ஒரு சில ரெயில்களை தவிர மற்ற ரெயில்களில் டிக்கெட் காத்திருப்போர் பட்டியலுக்கு வந்து விட்டது. இந்த ரெயில்கள் அனைத்திலும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகள் மட்டும் இடம் பெற்றுள்ளன.

முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் ரெயில் நிலையங்களில் வழங்கப்படாது. மேலும் ரெயில் நிலையத்தில் பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் தெற்கு ரெயில்வே வெளியிட்டது.இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் ரெயில் சேவை நேற்று தொடங்கியது.

5 மாதங்களுக்கு பிறகு ரெயில் சேவை தொடங்கியதால் சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் பயண ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் ரெயில்கள் அனைத்தும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் ஒரே ஒரு நுழைவு வாயில் வழியாக உள்ளே வருவதற்கும், வெளியே செல்வதற்கும் அனுமதிக்கப்பட்டனர். சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் 6-வது நுழைவு வாயில் வழியாகவும், எழும்பூர் ரெயில் நிலையத்தில் மையப்பகுதியில் உள்ள நுழைவு வாயில் வழியாகவும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோல் உடல் வெப்ப பரிசோதனையும், கேமராவில் பொருத்தப்பட்ட தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்பட்டது.இதேபோல் சென்டிரல் ரெயில் நிலையத்தில் 10 மற்றும் 11-வது நடைமேடைகள் ரெயில்களுக்காக ஒதுக்கப்பட்டது.

எழும்பூர் ரெயில் நிலையத்தில் 4 மற்றும் 5-வது நடைமேடைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து பயணிகளும் பரிசோதனைக்கு பிறகே ரெயிலில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.

ரெயில் நிலையத்துக்கு 90 நிமிடங்களுக்கு (1½ மணி நேரம்) முன்னரே பயணிகள் வர வேண்டும் எனவும், அனைவரும் முக கவசம், சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் எனவும், ஏ.சி பெட்டிகளில் கம்பளி போர்வைகள் எதுவும் வழங்கப்படாது எனவும், பயணிகள் தவிர வேறு யாருக்கும் ரெயில் நிலையத்துக்குள் அனுமதி இல்லை எனவும் தெற்கு ரெயில்வே ஏற்கனவே தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மாவட்டங்களுக்கு இடையிலான பஸ்போக்குவரத்தும் நேற்று மீண்டும் தொடங்கியது. கடந்த 1-ம் தேதி முதல் நகர பேருந்துகள் சேவை துவங்கிய நிலையில் நேற்று முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவையும் துவக்கப்பட்டது.

இதையடுத்து மதுரையில் பொதுமக்கள் மாட்டுத்தாவணி பஸ்நிலையம் மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து தங்கள் பயணத்தை தொடங்கினர். பேருந்தில் ஏறுவதற்கு முன்பு அவர்களுக்கு சானிடைசர் கொடுக்கப்பட்டது.

மதுரை ரயில் நிலையத்தில் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று உள்ளே சென்றனர். அவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையும் நேற்று தொடங்கியது. ஒட்டுமொத்தத்தில் அனைத்து சேவைகளும் நேற்று தொடங்கப்பட்டதால் சகஜ நிலை திரும்பி பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து