எதிர்க்கட்சித்தலைவருக்கு விஷம் கொடுத்தது இங்கிலாந்து அழகி: ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 22 செப்டம்பர் 2020      உலகம்
Alexei-Navalny 2020 09 22

Source: provided

மாஸ்கோ : ரஷ்ய எதிர்க்கட்சித்தலைவர் நவல்னிக்கு விஷம் கொடுத்தது ஒரு இங்கிலாந்து அழகிதான் என ரஷ்யா குற்றஞ்சாட்டி உள்ளது.

ரஷ்ய அதிபர் புடினை கடுமையாக விமர்சித்து வந்தவர் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி, விமானத்தில் பயணிக்கும் போது திடீரென சுகவீனமடைந்தார்.

அவர் தேநீரில் விஷம் கலக்கப்பட்டதாக குற்றம்சாற்றப்பட்டது.  ரஷ்யாவின் எதிர்ப்புக்கிடையே ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்ட நவல்னிக்கு  அங்கு சிகிச்சை அளீக்கப்படுகிறது.

அவருக்கு நோவிச்சோக் என்ற நரம்பு மண்டலத்தை பாதிக்கும் விஷம் கொடுக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டதன் பின்னணியில் இருப்பது ரஷ்ய அரசுதான் என்று குற்றம்சாட்டபட்டது. 

நவல்னி விமானத்தில் பயணிக்கும் போது ஒரு அழகிய இளம்பெண் அவருடன் இருந்ததாகவும், அந்த பெண்தான் அவருக்கு விஷம் கொடுத்ததாகவும் ரஷ்யா தற்போது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது. 

அத்துடன், இதன் பின்னணியில் இருப்பது இங்கிலாந்துதான் என்றும் கூறியுள்ளது. இப்படி ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் அழகி மரியா பெவ்சிக் (33) என்ற பெண் ஆவார். 

அவர் நவல்னியின் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றுகிறார். மரியா முன்பு இங்கிலாந்து அரசியல்வாதி ஒருவரிடம் பணியாற்றியதாகவும், மரியாவின் தந்தை ஒரு ஊசியை தயாரித்திருப்பதாகவும், அதை பயன்படுத்தி யாருக்கும் தெரியாமல் விஷத்தை உடலில் செலுத்தி விடலாம் என்றும் தொடர்ச்சியாக அவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள ரஷ்யா, இங்கிலாந்தில் வாழும் மரியாவை விசாரிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளது. 

ரஷ்யாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதற்கு முன் நேரடியாகவே ரஷ்யாவை தாக்கியுள்ள மரியா, ரஷ்யா நவல்னியைக் கொல்ல முயன்றது என்றும், இப்போது அதை மூடி மறைப்பதற்காக விஷயத்தை திசை திருப்புவதாகவும் தெரிவிக்கிறார். 

தான் இங்கிலாந்து அரசியல்வாதி ஒருவரிடம் வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறித்து பேசிய மரியா, 10 ஆண்டுகளுக்கு முன், தான் ஒரு மாணவியாக இருந்தபோது, அவரிடம் ஒரு இன்டெர்ன் ஆகத்தான் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

அத்துடன், தான் தன் பெற்றோர் விவாகரத்து செய்தபின் சுமார் 10 ஆண்டுகளாக தன் தந்தையை சந்திக்கவேயில்லை என்றும் கூறியுள்ளார் மரியா. 

இதற்கிடையில் கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் முன்னேறி வரும் நவல்னி, மருத்துவமனையில் தன் அறை முன்பு உள்ள பால்கனியில் தன் மனைவியுடன் அமர்ந்து தேநீர் அருந்தும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து