கோயம்பேடு காய்கறி சந்தையில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசு வெளியிட்டது

வியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020      தமிழகம்
TN-assembly 2020 09 24

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை வரும் 28-ம் தேதி முதல் திறக்கப்படவுள்ள நிலையில், காய்கறி சந்தை  உரிமையாளர்கள், பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

வாடிக்கையாளர்கள் உடல் வெப்ப சோதனை மற்றும் தேவைப்படும் இதர பரிசோதனை செய்த பின்னரே அங்காடிக்குள் அனுமதிக்கப்படுவர்.  அங்காடிக்கு வரும் அனைத்து வாகனங்களும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படும்.  * அனைத்து கடைகளிலும் முகக்கவசம், உடல் வெப்ப தெர்மோ மீட்டர், ஆக்ஸி மீட்டர் மற்றும் கிருமி நாசினி கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.  சென்னை கோயம்பேடு சந்தைக்குள் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் வருவதற்கு அனுமதியில்லை. கோயம்பேடு காய்கறி சந்தையில் தனிநபர் கொள்முதல் மற்றும் சில்லறை வணிகம் முற்றிலுமாக தடை செய்யப்படுகின்றது.  கடை உரிமையாளர்கள், பணியாளர்கள் மற்றும் அங்காடிக்கு வருபவர்கள் முகக்கவசம் மற்றும் பாதுகாப்பான இடைவெளி கடைபிடிக்க வேண்டும். 

அங்காடியில் உள்ள கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் பின்னல் ஆடைகள் வழங்கப்படும். அதனை உடுத்திய பணியாளர்களே கடைகளில் அனுமதிக்கப்படுவர். கடையின் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் உரிமையாளர்கள் பராமரிக்க வேண்டும்.  கடை வியாபாரிகள் தத்தமது கடைகளுக்குள் வியாபாரம் செய்யவும்; பொது இடங்களில் ஆக்கிரமிப்பு செய்வது அனுமதிக்கப்பட மாட்டாது. சாலையோர விற்பனை மற்றும் அங்காடிக்குள் பொது இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்வது முற்றிலும் தடை செய்யப்படும். ஒவ்வொரு கடைகளிலும் கடையின் நுழைவு வாயில் முன்பு கிருமி நாசினி வைக்க வேண்டும்.

அனைவரும் கிருமி நாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொண்ட பிறகே பொருட்களை வழங்க வேண்டும். மொத்த காய்கறி விற்பனை  அங்காடிக்கு வரும் சரக்கு வாகனங்கள் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அனுமதிக்கப்படும். வாடிக்கையாளர்களின் வாகனங்கள் அதிகாலை முதல் காலை 9 மணி வரை அனுமதிக்கப்படும். காய்கறி அங்காடியில் உள்ள நுழைவு வாயில்கள் காலை 9 மணி அளவில் மூடப்படும். அங்காடியில் கடை உரிமையாளர்கள், பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்காகவும், போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தவும் மற்றும் தனிநபர் இடைவெளியை உறுதி செய்யும் வகையிலும், காவல்துறையினரின் சேவைகள் பயன்படுத்தப்படும்.  அவர்களுக்கு உதவி செய்ய தனியார் நிறுவனங்கள் மூலம் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.  வாகன நெரிசலை தவிர்க்கும் பொருட்டு அங்காடிப்பகுதியில் ஒருவழிப்பாதை அறிமுகப்படுத்தப்பட்டு வாகன போக்குவரத்து சீர் செய்யப்படும்.  கோயம்பேடு வணிக வளாகத்தில் பொதுமக்களின் நடமாட்டம் மற்றும் வாகனப்போக்குவரத்துகள் அனைத்தும் கேமராக்கள் மூலம் அங்காடி நிர்வாகக் குழுவால் கண்காணிக்கப்படும். பிரதி வாரம் வெள்ளிக்கிழமை அங்காடிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.   மேற்கண்ட நடைமுறைகளை கடைபிடிக்காதது கண்டறியப்பட்டால் காவல்துறையினர் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து