சூப்பர் ஓவரில் இஷான் கி‌ஷனை களம் இறக்காதது ஏன்? -ரோகித் சர்மா விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 29 செப்டம்பர் 2020      விளையாட்டு
Rohit-Sharma 2020 09 29

Source: provided

துபாய் : பெங்களூர் அணிக்கு எதிரான சூப்பர் ஓவரில் இஷான் கிஷனை களம் இறக்காதது ஏன்? என்று மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். 

ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணி சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.

துபாயில் நடந்த 10-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் டிவில்லியர்ஸ் 55, படிக்கல் 54 , ஆரோன்பிஞ்ச் 52 ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. போல்ட் 2 விக்கெட்டும், ராகுல் சாஹர் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் கடின இலக்கை விரட்டிய  மும்பை இந்தியன்ஸ் துவக்கத்தில் தடுமாறியது. ஆட்டத்தின் கடைசி 5 ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கி‌ஷன், போலார்ட் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால்  20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்தது. பரபரப்பான இந்த ஆட்டம் டையில் முடிந்தது.

ஆட்டம் டை ஆனதால் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்ய சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.

சூப்பர் ஓவரில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய மும்பை அணி 1 விக்கெட் இழப்புக்கு 7 ரன்னே எடுத்தது. பெங்களூர் அணி 8 ரன் இலக்கை எடுத்து கடைசி பந்தில் வெற்றி பெற்றது. அந்த அணி விக்கெட் இழப்பின்றி 11 ரன்னை எடுத்தது.

தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-

எங்கள் அணியின் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அதே நேரத்தில் இஷான் கி‌ஷனும், போலார்ட்டும் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இஷான் கி‌ஷன் மிகவும் சோர்ந்த நிலையில் இருந்தார். அவர் நல்ல நிலையில் இல்லாததால் சூப்பர் ஓவரில் களம் இறக்கவில்லை.

சூப்பர் ஓவரில் போதுமான ரன்னை எடுக்காததால் தோல்வியை தழுவினோம். இது ஒரு சிறந்த ஆட்டம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து