முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் சைனிக் பள்ளிகளில் ஓ.பி.சி. இட ஒதுக்கீடு அடுத்த கல்வி ஆண்டு முதல் அமல்

சனிக்கிழமை, 31 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நாடு முழுவதும் இயங்கி வரும் சைனிக் பள்ளிகளில் 2021- 22 ஆம் கல்வியாண்டு முதல் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனப் பாதுகாப்புத் துறைச் செயலர் தெரிவித்துள்ளார்.

இந்திய பாதுகாப்புப் படைகளான ராணுவம், கப்பற்படை, விமான படைகளில் உயர் நிலை அதிகாரிகளாய் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக சிறுபிராயத்தில் இருந்தே மாணவர்களை தயார்படுத்த மத்திய அரசாங்கத்தால் 1961-ல் சைனிக் பள்ளிகள் நிறுவப்பட்டன.

இந்தியா முழுவதும் 28 சைனிக் பள்ளிகள் உள்ளன. தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் அமராவதி நகரில் சைனிக் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிகளைப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் மாநில அரசுகள் நடத்தி வருகின்றன.  

இந்நிலையில் அனைத்து சைனிக் பள்ளி முதல்வர்களுக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் செயலர் அஜய் குமார் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.  அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

சைனிக் பள்ளிகள் அமைந்துள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த மாணவர்களுக்கு அப்பள்ளிகளில் 67 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. பிற மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

இதில் பட்டியலினப் பிரிவினருக்கு 15 சதவீதமும் பழங்குடியினப் பிரிவினருக்கு 7.5 சதவீதமும் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இந்நிலையில் 2021- 22 ஆம் கல்வியாண்டு முதல் க்ரீமி லேயர் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து