முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக சாம்பியன்ஷிப்பில்லும் நிச்சயம் வெற்றி பெறுவேன்: சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நம்பிக்கை

வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2024      விளையாட்டு

சென்னை, கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாதனை படைத்த குகேஷூக்கு சென்னையில் அமோக வரவேற்பளிக்கப்பட்ட நிலையில், உலக சாம்பியன்ஷிப்பிலும் தான் வெற்றி பெற முடியும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

சாம்பியன் பட்டம்...

கனடாவின் டொரோன்டோ நகரில் நடந்த ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் 14 சுற்றுகள் முடிவில் இந்திய வீரரான தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் 9 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை பெற்றார். இதன்மூலம் கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெற்ற இளம் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், கேண்டிடேட்ஸ் தொடரை வென்றதன் மூலம் உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுக்கு எதிராக மோதும் தகுதியை பெற்றுள்ளார் குகேஷ்.

மிகவும் மகிழ்ச்சி...

இந்நிலையில், குகேஷ் நேற்று சென்னை வந்தடைந்தார். அதிகாலை 3 மணிக்கு வந்த குகேஷை வரவேற்க ஏராளமானோர் விமான நிலையத்தில் காத்திருந்தனர். அவரை வரவேற்க அவர் படித்த வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்திருந்தனர். அப்போது பேசிய குகேஷ், “நான் சொந்த மண்ணுக்கு வந்தடைந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது சிறப்பான சாதனை. தொடரின் தொடக்கத்தில் இருந்து நான் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தேன். அதிர்ஷ்டமும் எனக்கு சாதகமாக இருந்தது. தற்போது பலரும் செஸ் போட்டியினை கொண்டாடுவதைப் பார்க்க நெகிழ்ச்சியாக இருக்கிறது.

தமிழக அரசு நன்றி...

தமிழக அரசு, எனது அப்பா, அம்மா, பயிற்சியாளர், நண்பர்கள், எனது பள்ளி என எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. அடுத்ததாக உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கவனம் செலுத்த வேண்டும். சீனாவின் டிங் லிரன் மிகவும் திறமையானவர். அவரை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். உலக சாம்பியன்ஷிப்பில்லும் வெற்றி பெறுவேன் என்ற முழு நம்பிக்கை என்னிடம் இருக்கிறது”  எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து