பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி

சனிக்கிழமை, 16 ஜனவரி 2021      சினிமா
Vijai-Sathu 2021 01 16

Source: provided

சென்னை : நடிகர் விஜய் சேதுபதி பட்டாக்கத்தியால் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடியது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இது போன்ற ஆயுதங்களால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுபவர்களை போலீசார் கைது செய்து, வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருவதால் நடிகர் விஜய் சேதுபதி மீதும் நடவடிக்கை பாயுமோ என சிலர் கேள்வி எழுப்பி வந்தனர்.  இந்த நிலையில், பட்டாக்கத்தியால் கேக் வெட்டியது யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் தாம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக நடிகர் விஜய்சேதுபதி கூறியுள்ளார்.

பிறந்தநாளில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டியது சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் நிலையில், நடிகர் விஜய் சேதுபதி விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், எனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. இதனை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது. அதில் பிறந்தநாள் கேக்கை பட்டாக் கத்தியால் வெட்டி இருப்பேன்.

தற்போது பொன்ராம் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளேன். அந்தப் படத்தின் கதைப்படி ஒரு பட்டாக்கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். ஆகையால் அந்த படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடும் போது அதே கத்தியை வைத்து கேக்கை வெட்டினேன். இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதம் ஆகி உள்ளது.

இனிமேல் இதுபோன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கின்றேன். இச்சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கின்றேன் என விஜய் சேதுபதி விளக்கம் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து