சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். இன்று பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். அப்போது தமிழக திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கும் படி கோரி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் கோரிக்கை மனு அளிக்கவுள்ளார்.
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 11:55 மணிக்கு, டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு கட்சியினரால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவு 7:30 மணிக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை முதல்வர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, தமிழக சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுக்கான தொகுதிகள் குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது.
மேலும், கூட்டணி விவகாரம், பிற கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு உட்பட, பல்வேறு விஷயங்கள் குறித்தும், அமித் ஷாவுடன் முதல்வர் பேசியதாக தெரிகிறது.
இன்று காலை, 11:00 மணிக்கு, பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் எடப்பாடி சந்திக்கிறார். பிரதமருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதுடன், மத்திய திட்டங்களுக்கு வர வேண்டிய நிதி, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை மற்றும் பல்வேறு புதிய திட்டங்களுக்கு, நிதி ஒதுக்கீடு கோரி, பிரதமரிடம் மனு அளிக்க உள்ளார்.
இந்த சந்திப்புகளை முடித்து, இன்று இரவு, முதல்வர் சென்னை திரும்புகிறார்.