முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு நினைவு இல்லமாக மாற்றப்பட்ட ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம்

செவ்வாய்க்கிழமை, 26 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜன. 26. ஜெயலலிதாவின் நினைவு இல்லமான ‘வேதா நிலையம்’ இல்லத்தை வரும் 28–ம்தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.


முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார். சென்னை போயஸ் கார்டனில் அவர் வாழ்ந்த ‘வேதா நிலையம்’ நினைவு இல்லமாக மாற்றப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு அறிவித்தார்.

சட்டசபையிலும் இதற்காக மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, ஜெயலலிதா வசித்த இல்லத்தை நினைவிடமாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. அதன் அடிப்படையில் போயஸ் தோட்டம் அமைந்திருக்கும் நிலத்தை கையகப்படுத்தி அதற்கான இழப்பீடாக ரூ.68 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த தொகையையும் அரசு கோர்ட்டில் செலுத்தியது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் நினைவில்லம் அமைக்க அனுமதி வழங்கியது. இதனையடுத்து நினைவில்லமாக மாற்றி அதை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விட தமிழக அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது.


இந்நிலையில் ‘வேதா நிலையம்’ இல்லத்தை வரும் 28–ந் தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். இந்த விழாவிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார்.

முன்னதாக ‘வேதா நிலையம்’ இல்லத்தில் ஜெயலலிதா படித்த புத்தகங்கள், பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு இடம்பெறும் என்றும், நினைவு இல்லம் திறக்கப்பட்ட பின்னர் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்த ஜெயலலிதா உடல் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

பீனிக்ஸ் பறவை போன்ற வித்தியாசமான தோற்றத்தில் நினைவிடத்தை அமைக்க வடிவமைப்பு செய்யப்பட்டது. இதன் அடிக்கல் நாட்டு விழா கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 8-ந்தேதி நடந்தது. இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

50 கோடியே 80 லட்ச ரூபாய் செலவில் இத்தாலி மார்பிள், பளிங்கு கற்கள் ஆகியவை பதிக்கப்பட்டு இந்த நினைவிடம் அமைக்கப்பட்டது. பீனிக்ஸ் பறவை வடிவத்தில் ஜெயலலிதா நினைவிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நினைவிடத்தை திறந்து வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை 27-ம் தேதி திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து