முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய பயணிகளின் வருகையை தடுத்தால் பொருளாதாரம் பாதிக்கும்: சிங்கப்பூர் சுகாதார துறை அமைச்சர் தகவல்

வியாழக்கிழமை, 18 பெப்ரவரி 2021      உலகம்
Image Unavailable

கொரோனா அச்சத்தால் இந்தியா, இந்தோனேசியாவில் இருந்து வருபவர்களைத் தடுக்க எல்லைகளை மூடினால் சிங்கப்பூர் மக்கள் சமூக மற்றும் பொருளாதார பாதிப்பை சந்திப்பார்கள் என்று அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் இருந்து அதிகம் பேர் வருகை தரும் நிலையில் சிங்கப்பூர் அரசு தனது எல்லைகளை ஏன் மூடவில்லை என்று அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து சுகாதாரத் துறை இணையமைச்சர் டாக்டர் கோ போ கூன் கூறியதாவது:-

சிங்கப்பூரின் கட்டுமானத் துறையிலும், வேலைக்கு செல்லும் குடிமக்களின் குழந்தைகள், வீட்டில் உள்ள வயதானவர்களைப் பராமரிக்கும் பணிகளிலும் இந்தியா, இந்தோனேசிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் வருகையைத் தடுத்தால் சிங்கப்பூர் குடிமக்கள் தாங்கள் வாங்கிய குடியிருப்புகளின் சாவியைப் பெற முடியாமலும், தங்களது குடும்ப உறுப்பினர்களைப் பராமரிக்க வெளிநாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்கள், பராமரிப்பாளர்களை நியமிக்க காலதாமதம் ஏற்படும் நிலையும் உருவாகும். தவிர நமது பொருளாதாரம் பின்னடைவை சந்திப்பதுடன், குடிமக்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரமும் பாதிக்கக் கூடும். இந்த இரு நாடுகளில் இருந்து வருபவர்களில் பெரும்பாலானோர் சிங்கப்பூரின் குடிமக்களாகவும், நிரந்தர குடியுரிமை பெற்றவர்களாகவும், இங்குள்ளவர்களின் நெருங்கிய உறவினர்களாகவும் உள்ளனர். சிங்கப்பூரின் பொருளாதார மேம்பாட்டுக்காகப் பல்வேறு துறைகளில் பணியாற்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் தேவை உள்ளது. நாட்டின் மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது 2020 ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து தற்போது வரை வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் ஒரு சதவீதத்தினர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். கடந்த சில மாதங்களாக சீனா, இந்தோனேசியா, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்தவர்கள்தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டனர். இதில் சிங்கப்பூருக்கு வந்த இந்தோனேசியாவைச் சேர்ந்த 34 வயது வீட்டுப் பெண் பணியாளர் ஒருவர் மட்டுமே கொரோனாவால் செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்டார். கடந்த நவம்பர் 2-ம் தேதிக்குப் பிறகு தற்போதுதான் பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பணியாளர் எண்ணிக்கை குறைவானதாகும். சிங்கப்பூரில் இதுவரை 59,810 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 59,661 பேர் குணமடைந்துள்ளனர். 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 90 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 29 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து