பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மேற்கூரை அமைப்பதற்கான மானியம் ரூ.70,000 ஆக உயர்வு

செவ்வாய்க்கிழமை, 23 பெப்ரவரி 2021      தமிழகம்
ops-2020 11 05 - Copy

Source: provided

சென்னை : பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மேற்கூரை அமைப்பதற்கான மானியம் ரூ.70,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார். 

தமிழக சட்டசபையில் 2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் காலை 11 மணிக்கு சட்டசபை கூடியது. இதில் தமிழக துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 

நேற்றைய பட்ஜெட் கூட்டத்தொடரில் வேளாண்மை, சுகாதாரம், உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்த அறிக்கையை நிதியமைச்சர் பன்னீர்செல்வம் வெளியிட்டார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து தகவல் வெளியிட்ட நிதியமைச்சர் பன்னீர்செல்வம், பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மேற்கூரை அமைப்பதற்கான மானியம் ரூ. 70,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். சென்னை மாநகராட்சிக்காக தனித்தன்மை வாய்ந்த வளர்ச்சி திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான சிறப்பு திட்டம் ரூ.3,140 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். 

நிர்ணயித்த இலக்கிற்கு முன்னதாகவே, சாலை மேம்பாட்டு பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் 2-ம் கட்ட பணி ரூ.5,171 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.  ரூ.3,016 கோடி செலவில் 40 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படும் என்றும் ரூ. 144.33 கோடி நிதியில் 2,749 சமூக சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மேலும் காதாரத்துறைக்கு ரூ.19,420 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

மேலும் ரூ.6,448 கோடியில் சென்னை - குமரி தொழில் வழித்தட திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், வீட்டு வசதி துறைக்கு நிதியுதவியாக உலக வங்கியிடம் இருந்து, 1,492 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து