முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் ரஜினிகாந்துக்கு பால்கே விருது: மத்திய அரசு அறிவிப்பு

வியாழக்கிழமை, 1 ஏப்ரல் 2021      சினிமா
Image Unavailable

நடிகர் ரஜினியின் 40 ஆண்டு கால திரையுலக சாதனையை பாராட்டி, அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

51-வது தாதா சாகேப் பால்கே விருது நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை தந்தற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு இந்த விருது அளிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இந்திய திரைப்படத் துறையில் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது இதுவாகும். தங்கத் தாமரை பதக்கமும், ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும் கொண்டது இந்த விருது பெறுபவர்களுக்கு வழங்கப்படும்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தமிழக தேர்தலுக்கும் ரஜினிகாந்துக்கு விருது அறிவித்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார். 

முன்னதாக நடிகர் திலகம் சிவாஜி, இயக்குநர் கே.பாலசந்தர் ஆகியோருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் என்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியத் திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை எனக்கு வழங்கிய மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  என் நடிப்புத் திறமையை வெளிக்கொண்டு வந்த பேருந்து ஓட்டுநரான எனது நண்பன் ராஜ் பகதூருக்கும், வறுமையின் பிடியில் வாடியபோது என்னை நடிகனாக்க பல தியாகங்கள் செய்த சகோதரன் சத்யநாராயணாவிற்கும், என்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்து, இந்த ரஜினிகாந்தை உருவாக்கிய எனது இயக்குநர் பாலச்சந்தருக்கும், திரையுலக தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஊடகங்கள் மற்றும் என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள எனது ரசிக பெருமக்களுக்கும் இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன். என்னை வாழ்த்திய தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவரும், நண்பருமான மு.க.ஸ்டாலின், நண்பர் கமல்ஹாசன், மத்திய, மாநில அரசியல் தலைவர்களுக்கும், நண்பர்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும், என்னுடைய நலம் விரும்பிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், தமிழக தேர்தலை கருத்தில் கொண்டு நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் விருது அறிவிக்கப்பட்டுள்ளதா? என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  அதற்கு பதிலளித்த அவர், தமிழக சட்டசபை தேர்தலுக்கும், ரஜினிகாந்திற்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து