முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறைபிடிக்கப்பட்டுள்ள ராணுவ வீரரை விடுவிக்க பேச்சுவார்த்தை நடத்த தயார் - நக்சலைட்டுகள் அறிவிப்பு

புதன்கிழமை, 7 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

ராய்பூர் : நக்சலைட்டுகளின் பிடியில் உள்ள பாதுகாப்பு படை வீரரை விடுவிக்குமாறு அவரது 5 வயது மகள் வீடியோ மூலம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சத்தீஷ்கர் மாநிலம் பிஜாபூர் - சுக்மா எல்லைப் பகுதியில் மாவோயிஸ்டு களுக்கும், சி.ஆர்.பி.எப்.- ஆயுதப்படை போலீசார் அடங்கிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடந்த சனிக்கிழமை பயங்கர மோதல் ஏற்பட்டது.நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டதில் பாதுகாப்பு படையினர் 22 பேர் வீரமரணம் அடைந்தனர். பலர் காயம் அடைந்தனர். நக்சலைட்டுகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவிட்டு இருந்தார்.

பாதுகாப்பு படை வீரர்களின் உயிர் தியாகம் வீண் போகாது என்றும், நக்சலைட்டுகளை கூண்டோடு ஒழிப்பதற்கான வாய்ப்பை இந்த சம்பவம் உருவாக்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.இந்த தாக்குதல் சம்பவத்தின் போது ஜம்முவை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர் ராகேஷ்வர்சிங் மாயமாகி இருந்தார்.

அவரை வனப்பகுதியில் தேடும் பணியில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர். அவர் நக்சலைட்டுகளால் கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில் நக்சலைட்டுகளின் பிடியில் உள்ள பாதுகாப்பு படை வீரரை விடுவிக்குமாறு அவரது 5 வயது மகள் வீடியோ மூலம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தநிலையில் பாதுகாப்பு படை வீரர் ராகேஷ்வர்சிங் மன்ஹாஸ் உயிருடன் பாதுகாப்பாக எங்கள் பிடியில்தான் உள்ளார் என்று நக்சலைட்டுகள் அறிவித்து உள்ளனர். மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதுதொடர்பாக நக்சலைட்டுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பாதுகாப்பு படை வீரர் ராகேஷ்வர்சிங் எங்கள் சிறையில் இருக்கிறார். அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.சிறைபிடித்த பாதுகாப்பு படை வீரரை விடுவிக்க மத்திய அரசுடன் பேச்சு வார்த்தைக்கு தயாராக உள்ளோம். இந்த பேச்சு வார்த்தைக்கு மத்திய அரசு மத்தியஸ்தரை நியமிக்க வேண்டும். இந்த என்கவுண்டரில் 24 பாதுகாப்பு படை வீரர்கள் இறந்தனர். 31 பேர் காயமடைந்தனர்.

பாதுகாப்பு படையினருடன் நடந்த சண்டையில் எங்களது தரப்பில் 4 பேர் பலியானார்கள்.போலீசாருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் நாங்கள் எதிரிகள் அல்ல. நக்சலைட்டுகளை பழிவாங்க போவதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறி இருக்கிறார். யாரிடமிருந்து இந்த பழிவாங்கும் பலத்தை அவர் தொடங்க இருக்கிறார். நக்சலைட்டுகளிடமிருந்தா? அல்லது ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்தா?ஏனென்றால் நக்சல்களும், ஒடுக்கப்பட்ட மக்களும் ஒன்றுதான்.

மத்தியில் ஆளும் முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் நாள் தோறும் குரல் கொடுத்து வருகிறார்கள்.இந்த சமயத்தில் ஒரு விஷயத்தை நக்சல் மாவோயிஸ்டுகள் அமைப்பு தெளிவாக்க விரும்புகிறது. அதாவது எங்களின் போராட்டமும், சண்டையும் அரசாங்கத்துக்கு எதிரானதே தவிர பாதுகாப்புபடையினருக்கு எதிரானது கிடையாது. பாதுகாப்பு படை வீரர்களில் பெரும்பாலானோர் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதை நாங்கள் அறிவோம்.

ஆனால் எங்களை கொல்லும் நோக்கத்தில் ஆயுதங்களை ஏந்தி வருபவர்களுடன் சண்டையிடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இந்த சண்டையில் அவர்கள் உயிரிழக்கும் போது, அவர்கள் குடும்பத்தை நினைத்து நாங்கள் மிகவும் வேதனைபடுவோம். எனவேதான் பாதுகாப்பு படைகளில் தங்களின் பிள்ளைகளை சேர்க்க வேண்டாம் என்று மக்களிடம் நக்சல் அமைப்பு கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நக்சல் அமைப்பின் செய்தி தொடர்பாளர் விகாலாப் என்பவர் அந்த அறிக்கையில் கையெழுத்திட்டு உள்ளார். நக்சலைட்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு சமூக ஆர்வலரும், மீடியாவை சேர்ந்தவருமான ஒருவரை மத்தியஸ்தராக நியமிக்க முடிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து