முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல் தொடர் 7-வது லீக் ஆட்டம்: ராஜஸ்தானின் வெற்றிக்கு வித்திட்ட கிறிஸ் மோரிஸ்

வெள்ளிக்கிழமை, 16 ஏப்ரல் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : ஐ.பி.எல் தொடரின் 7-வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்திய ராஜஸ்தான் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. மில்லர், கிறிஸ் மோரிஸ் பங்களிப்பு அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது.

ஐ.பி.எல் தொடரின் 7-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. 

இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ப்ரீத்திவ் ஷா, ஷிகார் தவன் களமிறங்கினார்கள். சி.எஸ்.கே அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகினர். டெல்லி அணியில் மற்ற வீரர்கள் சொதப்பினாலும் கேப்டன் ரிஷப் பொறுப்புடனும் அதிரடியாகவும் விளையாடி 51 ரன்கள் சேர்த்தார்.

டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் அணி சார்பில் உனட்கட் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர் டெல்லி வீரர்கள்.

ராஜஸ்தான் அணி 42 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. டேவிட் மில்லர் மட்டும் அதிரடியாக விளையாடி 43 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து சற்று ஆறுதல் கொடுத்தார். 17-வது ஓவரை வோக்ஸ் வீச, அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக ஒரு சிக்ஸர் அடித்தார் உனத்கட். அப்போது ஆட்டத்தில் பரபரப்பு ஏறியது. 18 பந்துகளில் ராஜஸ்தான் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டன. பந்த் அப்போது ஒரு ரன் அவுட்டை தவறவிட்டார். ஆனால் அது தான் அவர் போட்டியை தவறவிட்ட முக்கிய தருணம் என்பதை அவர் அப்போது உணரவில்லை. 

ஆட்டத்தின் 19-வது ஓவர் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ரபாடா ஓவரில் முன்னணி பேட்ஸ்மேன்களே தடுமாறும் சூழலில் இரு சிக்ஸர்கள் அடித்து மிரட்டினார் மோரிஸ். இறுதி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவை. பதற்றப்படாமல் இரு பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்டார் மோரிஸ். இதனை அடுத்து ராஜஸ்தான் அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

முன்னதாக 4-வது லீக் ஆட்டத்தின்போது ஒரு இமாலய ரன் சேஸிங்கில் கடைசி பந்துவரை போராடி பஞ்சாப்பிடம் கோட்டை விட்ட ராஜஸ்தான் அணி டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்து தனது முதல் வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. 

தோல்விக்கு பிறகு பேசிய டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவிக்கையில்., இந்த ஆட்டத்தில் 15-20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம், ஆட்டத்தின் பிற்பகுதியில் பனித்துளி முக்கிய பங்கு வகித்தது என்றார். 

ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சுசாம்சன் தெரிவிக்கையில்., பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தான் எடுத்திருந்த நிலைப்பாட்டில் இப்போதும் உறுதியாக இருப்பதாகவும், அதே போட்டியை இன்னும் 100 முறை விளையாடினாலும், சிங்கிள் ரன் எடுக்க ஓடி இருக்க மாட்டேன் என சஞ்சுசாம்சன் தெரிவித்தார்.

முன்னதாக பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் கடைசி 2 பந்துகளில் 5 ரன்கள் அடித்தால் வெற்றி, நான்கு ரன்கள் எடுத்தால் ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் செல்லும் எனும் நிலையில், இறுதி ஓவரின் ஐந்தாவது பந்தில் பிடிவாதமாக ஒற்றை ரன் ஓடுவதற்கு மறுத்திருந்தார் சஞ்சுசாம்சன். அப்போது எதிர் முனையில் நின்றிருந்த கிறிஸ் மோரிஸ் முகத்தில் புன்னகை தவழவில்லை. கடைசி பந்தில் சாம்சன் அவுட் ஆக, நான்கு ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வென்றது நினைவிருக்கலாம்.

அதிக தொகைக்கு ஏலம் 

ஐ.பி.எல் வரலாற்றிலே அதிக தொகைக்கு ஏலம் போனவர் எனும் பெருமையை சமீபத்தில் பெற்றார் கிறிஸ் மோரிஸ். அவரை 16 கோடியே 25 லட்சம் ரூபாய் கொடுத்து ராஜஸ்தான் ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 18 பந்துகளை சந்தித்து 4 சிக்ஸர்கள் விளாசி 36 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார் மோரிஸ்.

5-ம் இடத்துக்கு முன்னேற்றம்

3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்திய ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் ஐந்தாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வரும் திங்கள்கிழமை சந்திக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து