முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீரர் - வீராங்கனை உள்ளிட்ட 7 பேருக்கு தொற்று: திட்டமிட்டபடி நடைபெறுமா டோக்கியோ ஒலிம்பிக் போட்டி?

வியாழக்கிழமை, 15 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

டோக்கியோ: டோக்கியோவில் ஒரு தடகள வீரர் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை ஒருவர் உள்ளிட்ட 7 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளதால் ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த வருடம்.... 

ஜப்பானில் கடந்த வருடம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெற இருந்தது. அந்த சமயம் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்ததால் போட்டி, இந்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஒலிம்பிக் போட்டி வருகிற 23-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆறு பேருக்கு... 

ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ஒரு தடகள வீரர், ஒரு பேட்மிண்டன் வீராங்கனை, ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஒரு விளையாட்டு ஊழியர் உள்பட 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 7 பேரின் அடையாளம் குறித்து அவர்கள் கூடுதல் விவரங்களை வழங்க மறுத்தனர். ஏற்கனவே இந்த போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டு விட்டது.

8 ஊழியர்களுக்கு... 

இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு சென்று உள்ள ஒரு தடகள வீரர் மற்றும் ஐந்து ஒலிம்பிக் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டு உள்ளதாக டோக்கியோ 2020 அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே பிரேசில் ஒலிம்பிக் போட்டி வீரர்கள் தங்கி இருந்த ஹமாமாஸ்து நகரில் ஒரு ஓட்டலில் 8 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

ரஷியாவை சேர்ந்த...

இந்த நிலையில் ரஷியாவின் ரக்பி செவன்ஸ் அணி ஊழியர் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஜூலை 1 முதல் ஜப்பானுக்குள் நுழைந்த 8,000 க்கும் மேற்பட்டவர்களிடையே இதுவரை ஒரு சிலருக்கு மட்டுமே பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

1,149 பாதிப்புகள்... 

இந்த நிலையில்தான் போட்டிகள் தொடங்க இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் ஜப்பானில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 22-ம் தேதிக்குப் பிறகு பதிவான அதிகபட்ச ஒரேநாள் பதிவு இதுவாகும்.

கொரோனா டெஸ்ட்... 

பிரேசில் ஜூடோ அணியினருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளது. டோக்கியோ விடுதி ஊழியர் ஒருவருக்கும் இவரது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கும் கொரோனா பாசிட்டிவ் உறுதியாகியுள்ளது. இது தவிர 16 தடகள வீரர்கள் அடங்கிய குழு, 10 ஊழியர்கள் டோக்கியோ விமான நிலையத்தில் ஜூலை 10-ம் தேதி வந்திறங்கினர். இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது, இவர்களுக்கு நெகட்டிவ் என்று வந்தால் மட்டும் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

பேட்மிண்டன்... 

இதற்கிடையே சுரினாம் நாட்டின் பேட்மிண்டன் வீராங்கனை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச் அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அவர்  டோக்கியோ கவர்னரை சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா சென்று...

தென்அமெரிக்க நாடான சுரினாமின் பேட்மிண்டன் வீராங்கனை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சுரினாமின் மற்ற வீரர்- வீராங்கனைகள் அமெரிக்கா சென்று, அங்கிருந்து ஜப்பான் செல்ல இருக்கின்றனர்.

BOX - 1 

அவசர ஆலோசனை

ரஷ்ய ரக்பி அணி ஸ்டாஃப், பிரேசில் ஜூடோ அணிக்கு உணவு வழங்கும் ஓட்டல் ஊழியர்கள், தற்போது சுரினாம் நாட்டின் பேட்மிண்டன் வீராங்கனை வரிசையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

இதனால் டோக்கியோ கவர்னருடன் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச் ஆலோசனை நடத்த உள்ளார்.  முன்னதாக தாமஸ் பேச் ஜப்பான் பிரதரை சந்தித்து பேசியிருந்தார். இந்த நிலையில் டோக்கியோ கவர்னரை சந்திக்க உள்ளார். ஆனால் எது குறித்து பேச இருக்கிறார் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து