முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணிதான் உலகின் சிறந்த டெஸ்ட் அணி: வார்னே புகழாரம்

புதன்கிழமை, 8 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

உலகின் சிறந்த டெஸ்ட் அணி இந்தியாதான் என்றும், கடந்த 12 மாதங்களில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மகத்தான சாதனையை இந்திய அணி படைத்திருக்கிறது என்றும் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.

இந்தியா வெற்றி...

இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த 4-வது டெஸ்டில் இந்தியா 157 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. முதல் இன்னிங்சில் பின்தங்கி இருந்து இந்த டெஸ்டில் இந்தியா பெற்ற வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

முதல் டெஸ்ட் டிரா...

நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது. இந்த டெஸ்டில் கடைசி நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் இந்தியாவின் வெற்றி பறிபோனது. லார்ட்சில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 151 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லீட்சில் நடந்த 3-வது டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 76 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 10-ந் தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.

பாராட்டுகள்... 

இந்த நிலையில் ஓவல் மைதானத்தில் இந்தியா பெற்ற வெற்றியை ஆஸ்திரேலிய முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் வார்னே வெகுவாக பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியதாவது., விராட் கோலி மற்றும் ஒட்டுமொத்த இந்திய அணிக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். மற்றொரு அற்புதமான வெற்றியை இந்தியா பெற்றுள்ளது. கடந்த 12 மாதங்களில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மகத்தான சாதனையை இந்திய அணி படைத்திருக்கிறது.

சிறந்த அணி... 

உலகின் சிறந்த டெஸ்ட் அணி இந்தியாதான் என்று என்னால் தெளிவாக சொல்ல முடியும். இந்த பட்டத்தை உங்களுக்கு (இந்தியா) மட்டுமே தர முடியும். இவ்வாறு வார்னே கூறி உள்ளார். இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. தற்போது இங்கிலாந்துக்கு எதிராக அந்நாட்டில் நடைபெறும் டெஸ்ட் தொடரையும் இந்தியா கைப்பற்ற நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து