ஆட்சிக்கு வந்தவுடன் 24 மணி நேரத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு என்று சொன்னோமா?- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

Ma Subramanian 2021 07 21

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் 24 மணி நேரத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றுத் தருவோம் என்று சொன்னோமா என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நீட் தொடர்பான எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியின் கேள்விகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்விற்கு எதிரான சட்ட முன்வடிவு தீர்மானம் பேரவையில் 1-2-2017 அன்று ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநரின் அனுமதியைப் பெற்று , இந்திய அரசியலமைப்புச் சட்ட விதி 254/2ன்படி இந்தியக் குடியரசுத் தலைவருக்கு ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அவர் சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்பது அனைவருக்குமே தெரிந்த செய்தி. 22-9-2017 அன்று உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை என்ற குறிப்பையும் திருப்பி அனுப்பியிருந்தது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காததையும், உள்துறை அமைச்சகம் சட்டமுடிவைத் திருப்பி அனுப்பியதையும் சட்டப்பேரவையிலே வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில்தான் எந்தவித அறிவிப்பும் இல்லாமல், அன்றைய அ.தி.மு.க. அரசாங்கத்தின் சட்டத்துறை சார்பில் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதினார். அக்கடிதத்தில் என்ன காரணத்தினால் ஒப்புதல் அளிக்கவில்லை என்று கேட்டு எழுதினார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளின்படி குடியரசுத் தலைவர் கேள்விகள் கேட்பதற்கு அப்பாற்பட்டவர் என்று தெரிந்தும்கூட காலத்தைக் கடத்துவதற்கே அன்றைக்கு அந்தக் கடிதத்தை எழுதியிருந்தார்கள்.

இப்போது எங்களிடம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கடிதத்தின் நகலும், அவர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிய கடிதத்தின் நகலும், உள்துறை அமைச்சகம் திருப்பி அனுப்பிய கடிதத்தின் நகலும் இருக்கிறது. இதில் எந்த விதத்தில் நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 24 மணி நேரத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவோம் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையிலே சொன்னதாக தவறாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதென்றால், ஆட்சிக்கு வந்தவுடன் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே நீட் தேர்விற்கு எதிராக விலக்கு பெறுவதற்கு சட்டமுன்வடிவு தயாரிக்கப்பட்டு, அம்மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் 24 மணி நேரத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றுத்தருவோம் என்று சொன்னதாக பேரவையிலேயே தெரிவித்தார். அதற்கு முதல்வர் நீட் தேர்வு குறித்த தெளிவான விளக்கத்தை அளித்திருக்கிறார். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதுபோலவே முதல் கூட்டத்தொடரிலேயே நீட் தேர்விற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

 

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து