முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். 43-வது லீக் ஆட்டம்: ராஜஸ்தானையும் வீழ்த்தி வெற்றி நடைபோடும் பெங்களூரு அணி

வியாழக்கிழமை, 30 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

துபாய்: ஐ.பி.எல். 2-ம் பகுதியில் மும்பையை வீழ்த்திய கையோடு நடந்து முடிந்த 43-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானையும் வீழ்த்தி அடுத்தடுத்த வெற்றி மூலம் பெங்களூரு அணி வெற்றி நடைபோடுகிறது. மேலும், அடுத்தடுத்த வெற்றி மூலம் ப்ளேஆஃப் வாய்ப்பையும் உயிர்ப்புடன் வைத்துள்ளது ஆர்.சி.பி.

நல்ல தொடக்கம்...

ஐ.பி.எல் 2021 சீசனின் 43-வது லீக் ஆட்டத்தில் துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் பெங்களூரு வென்றது. டாஸ் வென்ற பெங்களூரு, முதலில் பந்துவீச தீர்மானித்தது. ராஜஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களான எவின் லெவிஸ் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

ஜார்ஜ் கார்டன்...

சரியான நேரத்தில் 31 ரன்களோடு யஷஸ்வியின் விக்கெட்டை வீழ்த்தி இந்த இணைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் டேன் க்றிஸ்டின். 5 பவுண்டரியுடன் 3 சிக்ஸர்களை விளாசி அதிரடி காட்டிக் கொண்டிருந்த எவின் லெவிஸின் விக்கெட்டை வீழ்த்தி ராஜஸ்தானின் அதிவேக ரன் குவிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்தார் ஜார்ஜ் கார்டன். அப்போது ராஜஸ்தான் 11.1 ஓவர் முடிவில் 100 ரன்களுக்கு இரு விக்கெட்டை இழந்திருந்தது.

ஒற்றை இலக்க ரன்...

அதன் பிறகு வந்த அணித் தலைவர் சஞ்சு சாம்சன் உட்பட எந்த ஒரு பேட்டரும் நிலைத்து நின்று ரன்களைக் குவிக்கவில்லை. சஞ்சு சாம்சன் 19 ரன்கள் மற்றும் க்றிஸ் மோரிஸ் 14 ரன்களைக் குவித்ததே அதிகபட்ச ரன்கள். ராஜஸ்தானின் மிடிஸ் ஆர்டர் பேட்டர்களான மஹிபால் லோம்ரார், லியாம் லிவிங்ஸ்டன், ராகுல் தீவாட்டியா, ரியான் பராக் என அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் வீழ்ந்தனர்.

149 ரன்கள்...

20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டு இழப்புக்கு 149 ரன்களை குவித்திருந்தது ராஜஸ்தான். முதல் இரு விக்கெட்டுகளை வீழ்த்தியது எந்த அளவுக்கு முக்கியம் என விளையாடியதோ, அதே வேகத்தோடு அடுத்தடுத்த விக்கெட்டுகளை வீழ்த்தியது பெங்களூரு.

க்றிஸ் மோரிஸ்... 

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா போன்ற ஆபத்தான பேட்டர்களின் விக்கெட்டை ஒரே ஓவரில் வீழ்த்தி, பெங்களூரின் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்திய ஹர்ஷல் படேல், இந்த முறையும் க்றிஸ் மோரிஸ் உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தானை கட்டுக்குள் வைத்தார்.

7 பந்து வீச்சாளர்கள்...

யுவேந்திர சாஹல், ஷபாஸ் அஹ்மத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த போட்டியில் பெங்களூரு அணி ஏழு பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

மேக்ஸ்வெல்... 

பெங்களூரு தரப்பில் களமிறங்கிய விராட் கோலி 25 ரன்களோடும், தேவ்தத் படிக்கல் 22 ரன்களோடும் பெவிலியம் திரும்பினர். அடுத்துவந்த ஸ்ரீகர் பரத் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் கைகொடுத்தனர். அந்த ஜோடி, நிதானமாக ரன்களைக் குவித்து அணியை வெற்றி இலக்கை நோக்கி நகர்த்தினர். மேக்ஸ்வெல் 30 பந்துகளுக்கு 50 ரன்களைக் குவித்தார். இதில் 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸரும் அடக்கம்.

உதவவில்லை...

பெங்களூரு அணி 17 பந்துகளுக்கு முன்பே தன் வெற்றி இலக்கை அனாயாசமாக அடைந்தது. ராஜஸ்தான் அணியும் ஏழு பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தி இருந்தது. ஆனால் அது பெங்களூருவின் ரன் குவிப்பை தடுக்கவோ, விக்கெட்டுகளை வீழ்த்தவோ உதவவில்லை. முஸ்தஃபிசுர் ரஹ்மான் மட்டுமே 3 ஓவர்களுக்கு 20 ரன்களைக் குவித்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வீழ்த்தவில்லை... 

க்றிஸ் மோரிஸ்ஸின் 4 ஓவர்களில் 50 ரன்கள் போனது. தொடக்க வீரர்களை வீழ்த்திய வேகத்தில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை ராஜஸ்தான் வீழ்த்தவில்லை. க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் பரத் இணை வலுவாக நிலைபெற்று ரன்களை அடிக்கவிட்டது ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமானது.

மீண்டும் எழுச்சி...

ஏப்ரல் 2020-ல் இந்த ஐ.பி.எல் சீசன் தொடங்கிய போது பெங்களூரு அணி, ஐதராபாத், கொல்கத்தா, ராஜஸ்தான் என தொடர் வெற்றிகளைக் குவித்தது. செப்டம்பர் மாதம் மீண்டும் போட்டிகள் தொடங்கிய போது கொல்கத்தாவிடம் தோல்வி, சென்னையிடம் தோல்வி என துவண்டிருந்த அணி, மும்பை இந்தியன்ஸை 54 ரன்கள் வித்தியாசத்தின் வீழ்த்தி தன்னை போட்டியில் நிலைநாட்டிக் கொண்டது.

டீம் ஸ்பிரிட்...

ராஜஸ்தானையும் வீழ்த்தி ஒரு அணியாக தன் ப்ளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்போடு வைத்திருக்கிறது பெங்களூரு. ஒரு சில பேட்டர்கள் மட்டுமே ரன்களைக் குவிப்பது, டாப் ஆர்டர் பேட்டர்கள் வீழ்ந்தால் மொத்த அணியும் சடசடவென சரிவது போன்ற பிரச்சனைகளை எல்லாம் சரி செய்து, டீம் ஸ்பிரிட்டோடு விளையாடத் தொடங்கியுள்ளனர்.

3 ஆட்டங்கள்...

பிரத்யேகமாக மிடில் ஆர்டர் பேட்டர்கள் பொறுப்பை உணர்ந்து பேட்டை சுழற்றத் தொடங்கியுள்ளனர். வரும் அக்டோபர் 3-ம் தேதி பஞ்சாபையும், 6-ம் தேதி ஐதராபாத்தையும், 8-ம் தேதி டெல்லியையும் எதிர்கொள்ளவிருக்கிறது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ். கடந்த இரு போட்டிகளைப் போல வரும் போட்டிகளிலும் ஜொலிக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

3-ம் இடத்தை... 

சீசனின் மத்தியில் தடுமாறிக் கொண்டிருந்த பெங்களூரு தற்பொது 11 போட்டிகளில் 7-ல் வென்று புள்ளிகள் பட்டியலில் 3-ம் இடத்தை பிடித்திருகிறது. கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் 11 போட்டிகளில் 5-ல் வென்று 4 மற்றும் 5-வது இடத்தில் உள்ளன.

சுருக்கமான ஸ்கோர்

ராஜஸ்தான் 149/9.

எவின் லீவிஸ்  - 58, யஷஸ்வி ஜெய்ஸ்வால் -31, சஞ்சு சாம்சன்  - 19.

பந்துவீச்சு

ஹர்ஷல் படேல் - 3 / 34,  சஹல் - 2 / 18, ஷாபாஸ் அகமது- 2 / 10.

பெங்களூர் 153/3.

மேக்ஸ்வெல்  - 50*, ஸ்ரீகர் பரத் - 44, விராட் கோலி - 25.

பந்துவீச்சு

ரஹ்மான் - 2 / 20, சகாரியா - 0 / 18, மஹிபால் - 0 / 13.

புள்ளிகள் பட்டியல்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து