முக்கிய செய்திகள்

கோபி அருகே குடோனில் தீ: ரூ10 கோடி மஞ்சள் சேதம்

Kobe 2021 10 03

Source: provided

கோபி : மஞ்சள் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 200 டன் மஞ்சள் சேதமானது.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே பெரியபுலியூரில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சகோதரர்கள் ராஜேந்திர குமார் அகர்வால், சஞ்சய் குமார் அகர்வால் ஆகியோருக்கு சொந்தமான பெரிய  மஞ்சள் குடோன் உள்ளது. இந்த குடோனில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மஞ்சள் கொள்முதல் செய்து இருப்பு வைத்து விலை உயரும் போது விற்பனை செய்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஒரு ஆண்டாக கொள்முதல் செய்யப்பட்ட சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான 200 டன் மஞ்சள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. நேற்று குடோனில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் வேலை முடிந்து வீட்டிற்கு சென்று விட்டனர். இந்நிலையில் கோபி, கவுந்தப்பாடி, பவானி, பெரியபுலியூர் உள்ளிட்ட பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இரவு 10 மணிக்கு பலத்த சத்தத்துடன் இடி ஒன்று மஞ்சள் குடோன் மீது விழுந்துள்ளது. இதில் தீப்பிடித்து சுவிட்ச்பெட்டிகள், மின்சார மீட்டர் பெட்டிகள் வெடித்து சிதறியது.

மின்சார பெட்டிகள் வெடித்து சிதறியதில் ஏற்பட்ட தீப்பொறி உள்ளே இருந்த மஞ்சள் மூட்டைகள் மீது விழுந்ததில் தீப்பற்றி எரிய தொடங்கியது. நள்ளிரவில் தீ கொழுந்து விட்டு எரிந்த போதுதான் அருகில் இருந்தவர்களுக்கு தெரிய வந்தது. 

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, தீ குடோன் முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருந்தது. ஆனால், குடோனை சுற்றிலும் சுமார் 30 அடி உயரத்திற்குசுவர் இருந்ததால், தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து ஜே.சி.பி இயந்திரம் வரவழைக்கப்பட்டு சுவர்கள் இடிக்கப்பட்டு மீண்டும் தீயை அணைக்கும் பணி தொடங்கியது. விடிய, விடிய கொழுந்து விட்டு எரிந்த தீயை பல மணி நேரம் போராடியும்  அணைக்க முடியவில்லை. தொடர்ந்து தீ அணைக்கும் பணி நடந்தது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த கோபி டி.எஸ்.பி ஆறுமுகம், கவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த தீ விபத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 200 டன் மஞ்சள் சேதமானது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து