முக்கிய செய்திகள்

பவானிபூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக அக்.7-ல் மம்தா பானர்ஜி பதவியேற்பு

திங்கட்கிழமை, 4 அக்டோபர் 2021      இந்தியா
Mamatha-banarji

பவானிபூர் சட்டப்பேரவையின் உறுப்பினராக வரும் 7- ம் தேதி மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளசட்டசபைக்கு கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தாலும், கட்சித் தலைவரான மம்தா பானர்ஜி வெற்றிபெற முடியவில்லை. அவர் வழக்கமாக போட்டியிடும் பவானிப்பூர் தொகுதியை விட்டு விட்டு, நந்திகிராமில் களம்கண்டு, தனது முன்னாள் சகாவான பா.ஜ.க. வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியைத் தழுவினார். இருந்தபோதும் அவர் முதல்-மந்திரி பதவியை ஏற்றார்.

இதனால் அரசியல் சாசனப்படி, அவர் முதல்-மந்திரி பதவியை ஏற்ற 6 மாதங்களுக்குள் (நவம்பர் 5-க்குள்) மாநில சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. இந்தநிலையில் மம்தா பானர்ஜி போட்டியிட வசதியாக பவானிப்பூர் தொகுதியில் வெற்றி பெற்றிருந்த அவரது கட்சியின் சோவந்தேப் சாட்டர்ஜி பதவி விலகியதால் அந்த தொகுதி காலியானது. பவானிப்பூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே மம்தா பானர்ஜி முதல்-மந்திரி பதவியில் தொடர முடியும் என்பதால், இது அவருக்கு வாழ்வா, சாவா என்கிற வகையில் அமைந்தது.

கடந்த 30-ந் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. பவானிப்பூரில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. இறுதியில் பவானிப்பூரில் 57 சதவீத வாக்குகள் பதிவாகின. பவானிப்பூர் உள்பட 3 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஓட்டு எண்ணிக்கை நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தொடங்கியது. பவானிப்பூர் தொகுதியில் 21 சுற்றுகளாக ஓட்டு எண்ணிக்கை நடந்தது. முதல் சுற்றில் இருந்தே முதல்-மந்திரி மம்தா பானர்ஜிதான் முன்னிலை வகிக்கத் தொடங்கினார். முடிவில் 58 ஆயிரத்து 835 வாக்குகள் வித்தியாசத்தில், பா.ஜ.க. வேட்பாளரை வீழ்த்தி மம்தா அமோக வெற்றி பெற்றார்.

 

இந்நிலையில், மேற்கு வங்க சட்டப் பேரவை உறுப்பினராக அக்டோபர் 7-ம் தேதி மம்தா பானர்ஜி பதவியேற்றுக் கொள்வார் எனவும், இவ்விழாவில் கவர்னர் பங்கேற்க வேண்டுமென கோரிக்கை வைப்பதாகவும் மந்திரி  பார்தா சட்டர்ஜீ  கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து