முக்கிய செய்திகள்

லக்கிம்பூர் விவசாயிகள் மீது கார் மோதும் வீடியோவை வெளியிட்டார் 'பிரியங்கா'

செவ்வாய்க்கிழமை, 5 அக்டோபர் 2021      இந்தியா
Priyanka 2021 10 05

Source: provided

லக்னோ : உ.பி.யில் லக்கிம்பூர் கிராமத்தில் விவசாயிகள் மீது கார் மோதும் வீடியோவை பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நான்கு விவசாயிகள் உள்பட 9 பேர் பலியான சம்பவம் தொடர்புடைய கார் மோதல் காட்சிகள் என்று கூறப்படும் வீடியோவை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டிருக்கிறார்.

அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை பார்ப்பதற்காக டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரியங்கா காந்தியை திங்கட்கிழமை அதிகாலை முதல் உத்தர பிரதேச மாநில காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளனர். அவர் சீதாபூர் அரசு விருந்தினர் இல்லத்தில் உள்ள அறையில் அவர் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்.

வன்முறை, கலவரம் ஏற்படலாம் என்று அஞ்சப்படும் பகுதிக்கு செல்ல பிரியங்காவும் சில காங்கிரஸாரும் முற்படுவதால், முன்னெச்சரிக்கையாக அவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச காவல்துறையினர் கூறுகின்றனர். ஆனால், தாங்கள் அனைவரும் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள காணொளியில், உத்தர பிரதேச யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசும் மத்தியில் ஆளும் நரேந்திர மோதி தலைமையிலான அரசும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக காங்கிரஸ் கட்சியினரை இலக்கு வைப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், விவசாயிகள் மீது அக்கறை இருப்பதாக காட்டிக்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோதி, லக்கிம்பூர் வன்முறைக்கு மூலகாரணமான மத்திய உள்துறை இணை அமைச்சரை் அஜய் மிஸ்ராவை அமைச்சரவையில் இருந்து நீக்காமல் அவரது செயல்பாடுகளை ஊக்குவிப்பதாக குறிப்பிட்டார்.

இந்த நிலையில், லக்கிம்பூர் வன்முறைக்கு முந்தைய பாஜகவினரின் கார் மோதும் காட்சி எனக் கூறப்படும் வீடியோவை பிரியங்கா காந்தி நேற்று தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 25 நொடிகள் ஓடக்கூடிய அந்த காணொளியில், பன்பீர்பூர் பாதையில் வழியை மறித்து நின்ற விவசாயிகள் உள்ளிட்டோர் மீது வேகமாக வரும் ஒரு எஸ்யுவி ரக கார் மோதியதில் அதன் முன்பாக நின்றிருந்தவர்கள் தூக்கி வீசப்படும் காட்சிகள் உள்ளன. இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கார் மோதல் காட்சிகளை வெளியிட்ட பிரியங்கா தோன்றும் காணொளியில், "இப்போது விவசாயிகளை ஏற்றிக் கொன்றவர்களின் காணொளி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அதில் உள்ளவர்களை மோதி அரசாங்கம் கைது செய்ய ஏன் மறுக்கிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து