முக்கிய செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தி.மு.க.வில் விருப்ப மனுக்கள் இன்று முதல் விநியோகம்

சனிக்கிழமை, 20 நவம்பர் 2021      தமிழகம்
DMK 2021 10 13

Source: provided

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் விருப்ப மனுக்கள் தி.மு.க. சார்பில் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது. அந்த நிர்வாகம் 2016-ல் நிறைவடைந்தது.  அதன் பின்னர் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.  ஊரக பகுதிகளுக்கு தனியாகவும், நகர பகுதிகளுக்கு தனியாகவும் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு முதலில் ஊரக பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு கடந்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. அந்த தேர்தலில் பெரும்பாலான ஊரக பஞ்சாயத்துகளில் தி.மு.க. வெற்றி பெற்றது.  இதையடுத்து நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்தது.  இதற்கிடையில் டிசம்பர் மாதத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில்  தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடமிருந்து மனுக்கள் பெறப்படுகிறது. அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் இந்த பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அதன்படி சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் விருப்ப மனுக்கள் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது. அதனை பூர்த்தி செய்து அன்றே கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  ஒருசில மாவட்டங்களில் விருப்பமனு நேற்று முன்தினம் முதல் பெறப்படுகிறது. ஆனால் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என தனித்தனியாக பிரிக்கப்பட்டு விருப்ப மனுக்கள் வழங்கப்படுகிறது. நகர்மன்ற வேட்பு மனு கட்டணமாக ரூ.5000, பேரூராட்சிமன்ற உறுப்பினர் வேட்புமனு கட்டணமாக ரூ.2,500-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  ஆதிதிராவிடர் மற்றும் பெண்கள் இக்கட்டணத்தில் பாதி செலுத்த வேண்டும், விண்ணப்பப் படிவ கட்டணம் ரூ.10 செலுத்தி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் விருப்ப மனுக்களை விநியோகிக்கத் தொடங்கியுள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் அடுத்த மாத இறுதிக்குள் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது. வருகிற வாரத்தில் தேர்தல் கால அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து