முக்கிய செய்திகள்

உத்தரப்பிரதேச மாநிலம் 'நொய்டா' சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார்

வியாழக்கிழமை, 25 நவம்பர் 2021      இந்தியா
UP-Modi 2021 11 25

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் இந்தியாவில் ஐந்து சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட ஒரே மாநிலமாக உத்தரப்பிரதேசம் உருவாகிறது.

புதிதாக அமையவுள்ள நொய்டா விமான நிலையம் டெல்லி தலைநகர் பிராந்தியத்தின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக இருக்கும். இது இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் நெருக்கடி குறைவதற்கு உதவும். இதன் அமைவிடம் காரணமாக டெல்லி, நொய்டா, காசியாபாத், அலிகார், ஆக்ரா, ஃபாரிதாபாத் மற்றும் அருகில் உள்ள பகுதிகள் உள்ளிட்ட நகரங்களின் மக்களுக்கு சேவை புரியும்.

இந்த விமான நிலையத்தின் முதற்கட்டப்பணி ரூ.10,050 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது. 1300-க்கும் அதிகமான ஹெக்டேர் நிலப்பரப்பில் முடிக்கப்பட உள்ள முதலாவது கட்ட விமான நிலையம் ஆண்டுக்கு சுமார் 1.2 கோடி பயனாளிகளுக்கு சேவை செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். இது 2024 வாக்கில் நிறைவடையும். இதனை சர்வதேச ஒப்பந்ததாரரான சூரிச் சர்வதேச விமான நிலைய நிறுவனம் செயல்படுத்தும். முதல் கட்டத்திற்கான நில ஆர்ஜிதம், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான மறுவாழ்வு ஆகியவற்றுக்கான பூர்வாங்க பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இதில் உள்ள சரக்கு முனையம் 20 லட்சம் மெட்ரிக் டன் திறன் கொண்டதாக இருக்கும். பின்னர் இது 80 லட்சம் மெட்ரிக் டன்னாக விரிவுப்படுத்தப்படும். தரைவழிப் போக்குவரத்து மையமாக இந்த விமான நிலையம் உருவாகும் என்பதால் மெட்ரோ ரயில் போக்குவரத்து, அதிவேக ரயில் நிலையங்கள், டாக்சி, பேருந்து சேவைகள், தனியார் வாகன நிறுத்தம் போன்ற பன்முக போக்குவரத்து மையமாகவும் இது இருக்கும்.

இதன் மூலம் சாலை, ரயில், மெட்ரோ மூலம் விமான நிலையத்திற்கு தடையில்லா போக்குவரத்து தொடர்பை ஏற்படுத்த இயலும். யமுனா விரைவுச்சாலை, மேற்கத்திய புறநகர் விரைவுச்சாலை, கிழக்கத்திய புறநகர் விரைவுச்சாலை, டெல்லி-மும்பை விரைவுச்சாலை போன்ற அருகில் உள்ள அனைத்து முக்கிய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் விமான நிலையத்தோடு இணைக்கப்படும். டெல்லிக்கும், விமான நிலையத்திற்கும் இடையேயான பயண நேரத்தை 21 நிமிடங்கள் மட்டுமே என மாற்றும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள டெல்லி – வாரணாசி அதிவேக ரயில் போக்குவரத்து இந்த விமான நிலையத்தோடு இணைக்கப்படும் எனவும் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து