முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சுசீந்திரம் கோவிலில் சாமி தரிசனம்

வியாழக்கிழமை, 25 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சுசீந்திரம் கோவிலில் நேற்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். மேலும், கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான வெங்கடாசலபதி கோவிலிலும் கவர்னர் சாமி தரிசனம் செய்தார்.

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 2 நாள் சுற்றுப்பயணமாக கன்னியாகுமரி சென்றார். கன்னியாகுமரி வந்த கவர்னர் ஆர்.என். ரவி, கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் கனனியாகுமரி விருந்தினர் மாளிகையில் சைனிக் நல வாரியத்தினர் மற்றும் முன்னாள் படை வீரர்களுடன் கலந்துரையாடினார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலமாக படகு தளத்திற்கு வந்தார். அங்கிருந்து தனி படகில் திருவள்ளுவர் சிலைக்கு சென்றார். அங்கு அவர் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையின் கால் பாதத்தில் மலர் தூவி வணங்கினார். அங்கிருந்து படகு மூலம் விவேகானந்தர் பாறைக்கு சென்ற கவர்னருக்கு விவேகானந்தகேந்திரா நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. விவேகானந்தர் மண்டபத்தை கவர்னர் ஆர்.என். ரவி பார்வையிட்டார். அதன் பிறகு அங்கிருந்து மீண்டும் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார்.

2-வது நாளான நேற்று காலை 7.40 மணிக்கு சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தாணுமாலயன் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதியில் கவர்னர் குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தார். பின்னர் 8.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கார் மூலமாக கன்னியாகுமரிக்கு சென்றார்.

கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான வெங்கடாசலபதி கோவிலுக்கு சென்றார். அங்கு கவர்னர் ஆர்.என். ரவி சாமி தரிசனம் செய்தார். இதை தொடர்ந்து விவேகானந்தகேந்திராவில் உள்ள ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடத்தையும் பார்வையிட்டார். அதன் பிறகு அரசினர் விருந்தினர் மாளிகைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து கார் மூலமாக தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார். கவர்னர் வருகையையடுத்து கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து