முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பலி: ஆந்திரம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் இரங்கல்

புதன்கிழமை, 8 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் மறைவிற்கு ஆந்திரம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் நஞ்சப்ப சத்திரம் என்ற இடத்தில் விழுந்து விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணித்த முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் பலியானதாக இந்திய விமானப் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் பலியான தலைமை தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் மரணத்திற்கு பல்வேறு மாநில முதல்வர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழகத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான செய்தியால் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளேன். விபத்தில் பலியான ஜெனரல் விபின் ராவத்திற்காக பிரார்த்தனை செய்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த கடினமான நேரத்தில் அவர்கள் வலிமை பெறட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  "முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 பேர் உயிரிழந்துள்ள செய்தியை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். இது உண்மையில் தேசத்திற்கு மிகப் பெரிய இழப்பு. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “துரதிர்ஷ்டவசமான விபத்தில் சிக்கிய இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டரில் சென்ற ஜெனரல் விபின் ராவத், அவரது மனைவி, அவர்களுடன் சென்ற ராணுவ அதிகாரிகள் மற்றும் குழுவினரின் அகால மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள். இந்த துயரத்தைப் பகிர்ந்து கொள்வதில் கேரளமும் தேசத்துடன் துக்கம் அனுசரிக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

இதுபோல் பல்வேறு மாநில முதல்வர்களும், தலைவர்களும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து