முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்ணப்பித்த அனைவருக்கும் நகைக் கடனை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்: ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 30 டிசம்பர் 2021      அரசியல்
Image Unavailable

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிப்படி தகுதியுள்ள அனைவரது நகைக் கடன்களையும் தள்ளுபடி செய்து கடன் சுமையிலிருந்து மக்களை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

2021-ம் ஆண்டு தமிழக சட்டசபை பொதுத் தேர்தலின் போது, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் ஐந்து பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அப்போது எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. 

இதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. ஆனால், இன்று நகைக் கடன் வாங்கியோரில் கிட்டத்தட்ட 75 விழுக்காடு கடனாளிகளுக்கு நகைக் கடன் தள்ளுபடி கிடையாது என்று அரசு அறிவித்து இருக்கிறது. நகைக் கடன் தள்ளுபடி குறித்து அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஏற்கெனவே பெறப்பட்ட 48 லட்சத்து 84 ஆயிரத்து 726 பயனாளிகளின் விவரங்களை பகுப்பாய்வு செய்ததில் 35 லட்சத்து 37 ஆயிரத்து 693 கடனாளிகள் நகைக்கடன் பெறத் தகுதி இல்லாதவர்கள் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

அதாவது, தேர்தல் வாக்குறுதிப்படி 18 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தள்ளுபடி செய்திருக்க வேண்டிய நகைக்கடன், நிதிநிலை அறிக்கையில் 5,000 ஆயிரம் கோடி ரூபாய் எனக் குறைக்கப்பட்டு, தற்போது அது கிட்டத்தட்ட 4,500 கோடி ரூபாய் என்ற அளவிற்கு வந்து நிற்கிறது.

நகைக் கடன் தள்ளுபடிக்கான தி.மு.க. அரசின் இந்த அறிவிப்பு 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கடனாளிகளாக ஆக்கியுள்ளது. இந்தச் செயல் நம்பிக்கைத் துரோகத்தின் உச்சகட்டம். வாக்களித்த மக்களை வஞ்சித்த தி.மு.க. அரசிற்கு அ.தி.மு.க. சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே விண்ணப்பித்த அனைவருக்கும் தேர்தல் வாக்குறுதிப்படி நகைக்கடனைத் தள்ளுபடி செய்து அவர்களை கடன் சுமையிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து